மீண்டும் ‘ஜோக்கர்’ ஆன தென் ஆப்பிரிக்கா.. சரித்திரத்தை மாற்றி எழுதிய நியூசிலாந்து

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான மகளிர் டி20 உலகக்கோப்பையில் நியூசிலாந்து அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றியது.

Oct 21, 2024 - 15:06
Oct 21, 2024 - 15:10
 0
மீண்டும் ‘ஜோக்கர்’ ஆன தென் ஆப்பிரிக்கா.. சரித்திரத்தை மாற்றி எழுதிய நியூசிலாந்து
மகளிர் டி20 உலகக்கோப்பையை முதன்முறையாக கைப்பற்றியது நியூசிலாந்து அணி

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு எமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில், ’ஏ’ பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் வங்கதேசம், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஸ்காட்லாந்து ஆகிய அணிகளும் இடம்பெற்று இருந்தன.

இதில், குரூப் ‘ஏ’ பிரிவில் இருந்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகளும், ’பி’ பிரிவில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளும் நாக் அவுட் சுற்றுக்கு தகுதிபெற்றன. இதனையடுத்து நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியாவை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அணியும், வெஸ்ட் இண்டீஸ் அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணியும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

நேற்று தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களம் புகுந்த நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகப்பட்சமாக அமீலா கெர் 43 ரன்களும் [38 பந்துகள்], புரூக் ஹாலிடே 38 ரன்களும் [28 பந்துகள்], சூயிஸ் பேட்ஸ் 32 ரன்களும் [31 பந்துகள்] எடுத்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் நோன்குலுலெகோ 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பின்னர் 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் மட்டுமே எடுத்து 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஒரு கட்டத்தில் 55 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை மட்டும் இழந்திருந்த தென் ஆப்பிரிக்கா அணி, அடுத்த 71 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நியூசிலாந்து வீராங்கனைகள் அபாரமாக பந்துவீசி தென் ஆப்பிரிக்கா வெற்றியை தடுத்து நிறுத்தினர். இதனால், நியூசிலாந்து அணி முதன்முறையாக உலகக்கோப்பை தழுவியது.

இதன் மூலம், நடைபெற்ற மகளிர் டி20 உலகக்கோப்பையை முதன் முறையாக கைப்பற்றி சாதனை படைத்தது நியூசிலாந்து மகளிர் அணி. இதற்கு முன்னதாக 14 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2010ஆம் ஆண்டு இறுதிப்போட்டிக்குள் நுழைந்த நியூசிலாந்து அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை தழுவி இருந்தது.

வழக்கம்போல, காலிறுதி, அரையிறுதி, இறுதிப்போட்டி போன்ற முக்கியமான கட்டத்தில் தென் ஆப்பிரிக்கா தோல்வியை தழுவுவதை வாடிக்கையாகி வருகிறது. இதனால், தென் ஆப்பிரிக்கா அணியை கிரிக்கெட் ரசிகர்கள் ‘ஜோக்கர் அணி’ என்று அழைத்து வருகின்றனர். அந்த சோகம் தற்போதும் நீடித்து வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த ஆண்கள் டி20 உலகக்கோப்பையில் கூட, இந்தியாவிற்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow