2ஆவது டெஸ்டிலும் விளையாட மாட்டார் வில்லியம்சன்.. 3ஆவது டெஸ்டில் உறுதி

இந்திய அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியன்சம் களமிறங்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

Oct 23, 2024 - 15:31
 0
2ஆவது டெஸ்டிலும் விளையாட மாட்டார் வில்லியம்சன்.. 3ஆவது டெஸ்டில் உறுதி
கேன் வில்லியம்சன்

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, டாம் லாதம் தலைமையில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 16ஆம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதன் மூலம் இந்திய மண்ணில் நியூசிலாந்து அணி 36 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றியை ருசித்துள்ளது. இதுவரை நியூசிலாந்து 3 முறை மட்டுமே இந்திய மண்ணில் வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, 1969ஆம் ஆண்டு நாக்பூரில் நடைபெற்ற டெஸ்டிலும், 1988ஆம் ஆண்டு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற டெஸ்டிலும் நியூசிலாந்து வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து முன்னிலை வகிக்கிறது. 2ஆவது டெஸ்ட் போட்டி வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரையிலும், 3ஆவது டெஸ்ட் போட்டி நவம்பர் 1ஆம் தேதி தொடங்கி 05ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் அனுபவ வீரரும், முன்னாள் கேப்டனுமான கேன் வில்லியம்சன் காயம் காரணமாக விளையாடவில்லை. அவர், உடல்தகுதியை பெறுவதற்காக தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், முழு உடற்தகுதி பெறாததால், 2ஆவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கூறியுள்ள நியூசிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டெட் கூறுகையில், 'கேன் வில்லியம்சன் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அவர் சரியான வழியில் சென்றுகொண்டிருக்கிறார். ஆனால், 100 சதவீதம் உடற்தகுதியை பெறவில்லை.

ஆனாலும், வரும் நாட்களில் நல்ல முன்னேற்றம் காணுவார் என்றும், மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னால் அவர், தயாராகி விடுவார் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், அவர் தன்னை தயார்படுத்திக்கொள்ள முடிந்தவரை அவகாசம் கொடுப்போம் என்று கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow