Nepal Bus Accident : காத்மண்டு: இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் நேபாள நாட்டிற்கு ஆன்மிக பயணம் மேற்கொள்வது வழக்கம். அதேபோல், மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து 43 பேர் கொண்ட ஒரு குழுவினர், நேபாளத்திற்கு 10 நாட்கள் ஆன்மிக சுற்றுலாப் பயணம் சென்றனர். இதற்காக மகாராஷ்டிராவில் இருந்து பேருந்தில் நேபாளம் சென்ற அவர்கள், விபத்தில் சிக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது 43 இந்தியர்கள் பயணம் மேற்கொண்ட அந்த பேருந்து, நேபாளத்தின் பொக்காராவில் இருந்து காத்மாண்டு நோக்கி சென்றுகொண்டிருந்தது.
அப்போது, டனாஹுன் மாவட்டத்தில் உள்ள மார்ஸ்யாங்டி அருகே சென்று கொண்டிருந்தபோது அங்கிருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து கடும் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மேலும் 11 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து இச்சம்பவத்தில் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், இந்த விபத்தில் படுகாயமடைந்த 16 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து நேபாள போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக சொல்லப்படுகிறது. அதேபோல் விபத்து நடைபெற்ற பகுதியில் கனமழை பெய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தற்போது சிகிச்சைப் பெற்று வருபவர்களில் சிலரின் நிலைமை மோசமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மேலும் படிக்க - பொம்மை என நினைத்து பாம்பை கடித்த குழந்தை
அதேபோல், நேபாள விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு கொண்டு வர இந்திய தூதரகம் சார்பில் ஏற்பாடுகள் நடைபெறுவதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து இரு நாட்டு அதிகாரிகளும் விரைவில் முடிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நேபாள விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இதனிடையே, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். நேபாளத்தில் நடைபெற்ற விபத்தில் இந்தியர்கள் உயிரிழந்தது குறித்து செய்தி அறிந்ததும் அதிர்ச்சியடைந்தேன்.
அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல், மேலும் காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய வேண்டுகிறேன். இந்த விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய தூதரக அதிகாரிகள் தேவையான உதவிகளை செய்வார்கள் என பதிவிட்டுள்ளார். அதேபோல் மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோரும் நேபாள விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.