நவராத்திரி 6ம் நாள்: வழிபாடு மற்றும் பலன்கள்!
நவராத்திரியின் 6ம் நாளில் மகாலட்சுமியை வழிபடும் முறைகள் மற்றும் அதன் பலன்கள் குறித்து கீழே பார்க்கலாம்.
நவராத்திரியின் 6வது நாள் இன்று (அக். 8) கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் ஐந்தாவது நாளில் அம்பிகையை தாயாக வழிபடுவதை போல், நவராத்திரியின் 6வது நாளில் அம்பிகையை சிறிய பெண் குழந்தையின் வடிவமாக வழிபட வேண்டும்.
மகாலட்சுமியை வழிபடுவதற்குரிய நிறைவு நாளே நவராத்திரியின் 6ம் நாளாகும். இதையடுத்து வரும் மூன்று நாட்களும் சரஸ்வதி தேவிக்கு அற்ப்பணிக்கப்பட்ட நாட்களாகும். நவராத்திரியின் 6ம் நாள் என்பது மகாலட்சுமியிடம், நம்முடைய வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விதமான செல்வங்களையும் வேண்டி பெறுவதற்குரிய மிக முக்கியமான நாளாகும். இந்த நாள் தனித்துவம் மற்றும் வெசேஷ பலன்கள் கொண்ட நாளாகும்.
இந்த ஆண்டின் நவராத்திரியின் 6ம் நாள் முருகப் பெருமானின் வழிபாட்டிற்குரிய செவ்வாய் கிழமையும், வளர்பிறை சஷ்டியும் இணைந்து வரும் நாள் அமைக்கிறது. இது மேலும் விசேஷமான ஒன்றாகும். முருகப் பெருமான், ஒரு மனிதன் நிறைவான வாழ்க்கையை வாழ்வதற்கான அனைத்து நலன்களையும் வழங்கக் கூடியவர். அடியார்களின் துன்பத்தை போக்க ஓடோடி வரக் கூடியவர். செவ்வாய் கிழமை என்பது பக்தர்களின் துன்பங்கள் தீர்க்கும் துர்க்கைக்கும் உரிய நாளாகும். இது மகாலட்சுமிக்கும் உரிய மங்கள நாளாக கருதப்படுகிறது.
நவராத்திரியின் 6ம் நாளான இன்று (அக். 8) தேவிக்கு கடலை மாவு கோலம் போட்டு, செம்பருத்திப் பூ, சந்தன இலை உள்ளிட்டவை கொண்டு அலங்காரம் செய்ய வேண்டும். தேங்காய் சாதம், பச்சைப் பயிறு சுண்டல், நார்த்தம் அல்லது ஆரஞ்சு பழங்கள் ஆகியவற்றை தேவிக்கு படைக்க வேண்டும். இப்படி செய்து வழிபட்டால் நீண்ட நாட்களாகத் தள்ளிப்போகும் வெளிநாடு வேலை வாய்ப்புகள் கைகூடும். அதோடு திருமணத் தடை நீங்கும் என்று கூறப்படுகிறது. வழக்குகளில் வெற்றியை அளிப்பதுடன், பல ஜென்ம பாவங்கள் நீங்கும். இதுமட்டுமில்லாமல் திருமணம் ஆகாத பெண்கள், திருமண வாழ்க்கை சரியாக அமையாத பெண்கள் இந்த அம்பிகையை வழிபட்டால் மங்களகரமான வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை.
What's Your Reaction?