ரோகித் சர்மா கிடையாது.. இவர்தான் சரியான போட்டியாளர்.. - ஆஸி. வீரர் ஓபன் டாக்

இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தான் தனக்கு சரியான போட்டியாளர் என்று வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.

Sep 15, 2024 - 02:40
Sep 15, 2024 - 02:45
 0
ரோகித் சர்மா கிடையாது.. இவர்தான் சரியான போட்டியாளர்.. - ஆஸி. வீரர் ஓபன் டாக்
விராட் கோலி சரியான போட்டியாளர் - மிட்செல் ஸ்டார்க்

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின், முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற நவம்பர் மாதம் 22ஆம் தேதி தொடங்க உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஷஸ் தொடருக்குப் பிறகு அதிகம் எதிர்பார்க்கப்படும் தொடராக பார்டர் - கவாஸ்கர் தொடர் உள்ளது.

தற்போது விளையாடவுள்ள இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய இரண்டு அணிகளும் சம அளவிலான பலத்துடன் காணப்படுகிறது. இந்திய அணியில், ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல் போன்ற அனுபவ பேட்டர்கள் உள்ளனர். மேலும், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா இருவரும் ஆல்-ரவுண்டர்களாக பல போட்டிகள் ஜொலித்து வருகின்றனர்.

முக்கியமாக வேகப்பந்து கூட்டணியான ஜாஷ்பிரிட் பும்ரா, மொஹமது சிராஜ் உடன் காயம் காரணமாக சில போட்டிகளில் விளையாடாத மொஹமது ஷமி ஆஸ்திரேலியா தொடரில் இடம் பிடிப்பார் என்று தெரிகிறது. இந்த மூவர் கூட்டணி, பேட்டர்கள் ஜொலிக்காதபோது கூட இந்திய அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்துள்ளனர்.

அதேபோல் ஆஸ்திரேலியா அணியிலும் ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லபுஷேன், உஸ்மான் கவாஜா, டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி உள்ளிட்ட அபாரமான பேட்டிங் வரிசையை கொண்டுள்ளது. மிட்செல் மார்ஷ், கேமரூன் கிரீன், பேட் கம்மின்ஸ் போன்ற ஆல்-ரவுண்டர்கள் உள்ளனர். வேகப் பந்துவீச்சில் மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ், ஜோஷ் ஹசில்வுட் கூட்டணி அட்டகாசமாக விளையாடி வருகிறது.

ஆஸ்திரேலியா தனது சொந்த மண்ணில் விளையாடுவதால், அந்த அணிக்கு சற்று கூடுதல் அனுகூலமாக இருக்கும். ஆனாலும், கடந்த முறை இந்திய அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பையை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால், இந்த தொடரை வெல்ல வேண்டும் என்று ஆஸ்திரேலியா வீரர்கள் கங்கணம் கட்டிக்கொண்டு உள்ளனர்.

அதிலும், மிட்செல் ஸ்டார்க்கின் பவுலிங்கை, விராட் கோலி எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். ஏனென்றால், இரு அணிகளுக்கு இடையேயான தொடர்களில், விராட் கோலிக்கு எதிராக, மிட்செல் ஸ்டார்க் சிறப்பாகவே பந்துவீசி உள்ளார். டெஸ்ட் போட்டியில் நான்குமுறை கோலியை, ஸ்டார்க் வெளியேற்றி உள்ளார்.

இந்நிலையில், இது குறித்து கூறியுள்ள ஸ்டார்க், “இருவரும் நிறைய போட்டிகளில் விளையாடினாலும், விராட் கோலிக்கு எதிராக பந்துவீசுவதை அனுபவித்து விளையாடி உள்ளேன். இருவருக்கும் இடையே சிறப்பான மோதல் இருக்கும். ஓரிரு முறை நான் அவரை வீழ்த்தி இருக்கிறேன், அதேபோல அவரும் எனக்கு எதிராக, ரன்களை குவித்திருக்கிறார். ஆகவே, இந்த முறையும் சிறந்த போட்டி இருக்கவே செய்யும்” என்றார்.

விராட் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 6 சதங்கள் உட்பட 1,352 ரன்களை எடுத்துள்ளார். அதேபோல், மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் 236 ரன்களை எடுத்துள்ளார். மிட்செல் ஸ்டார்க் தனது சொந்த மண்ணில் 50 டெஸ்ட் போட்டிகளில் 217 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டலாக பந்துவீசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow