விளையாட்டு

வெண்கலப் பதக்க சுற்றுக்கு முன்னேறிய இந்திய ஜோடி: பாரிஸ் ஒலிம்பிக்கில் இன்றைய போட்டிகள்

Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மனு பாகர் - சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலப் பக்கத்துக்கான சுற்றுக்கு முன்னேறியது.

வெண்கலப் பதக்க சுற்றுக்கு முன்னேறிய இந்திய ஜோடி: பாரிஸ் ஒலிம்பிக்கில் இன்றைய போட்டிகள்
மனு பாக்கர் - சரப்ஜோத் சிங் இணை

Paris Olympics 2024 Today Schedule in Tamil : 33-வது ஒலிம்பிக் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் இம்மாதம் 24ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெற்று வருகிறது. சுமார் 206 நாடுகளைச் சேர்ந்த 10,741 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற 10 மீ. ஏர் பிஸ்டல் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் [Manu Bhaker] 221.7 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றார். மனு பாக்கர் பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக முதல் பதக்கம் வென்ற வீராங்கனை என்ற பெருமை பெற்றார். அத்துடன் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற முதல் பெண் என்ற வரலாற்று சாதனையையும் மனு பாக்கர் படைத்தார்.

துப்பாக்கி சுடுதல்:

இந்நிலையில், 3வது நாளான நேற்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர்களுக்கான தகுதி சுற்றில் மனு பாக்கர் - சரப்ஜோத் சிங் இணை களமிறங்கியது. இதில் மனு பாக்கர் - சரப்ஜோத் சிங் ஜோடி 580 புள்ளிகளை குவித்து 3-வது இடம் பிடித்து பதக்க சுற்றுக்கு முன்னேறியது. வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்திற்கான இன்றைய போட்டியில், கொரிய இணையுடன் மோதவுள்ளது. இந்த போட்டி மதியம் 01.00 மணிக்கு தொடங்குகிறது.

மதியம் 12.30 மணிக்கு நடைபெறவுள்ள ட்ராப் ஆண்கள் துப்பாக்கி சுடுதல் தகுதிப்போட்டியில் பிருத்விராஜ் தொண்டைமான் களம் காணுகிறார்.

அதேபோல், ட்ராப் பெண்கள் துப்பாக்கி சுடுதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் ராஜேஸ்வரி குமாரி மற்றும் ஷ்ரேயாசி சிங் பங்கேற்கவுள்ளனர்.

படகுப்போட்டி:

மதியம் 01.45 மணிக்கு நடைபெறவுள்ள ஆண்கள் ஒற்றையர் படகுப் போட்டிக்கான காலிறுதிச் சுற்றில் பால்ராஜ் பன்வார் பங்கேற்கிறார்.

ஹாக்கி:

இன்று மாலை 04.45 மணிக்கு நடைபெறும் ஆண்கள் ஹாக்கி போட்டியின் லீக் சுற்றில் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியாவும், அயர்லாந்து அணியும் மோதுகின்றன.

வில்வித்தை:

மாலை 05.14 மணிக்கு நடைபெறவுள்ள பெண்களுக்கான தனிநபர் வில்வித்தை போட்டியின் வெளியேற்றுதல் சுற்றில் அங்கிதா பகத், போலந்து வீராங்கனையுடனும், பஜன் கவுர் இந்தோனேஷியா வீராங்கனையுடனும் மோதவுள்ளனர்.

பேட்மிண்டன்:

மாலை 05.30 மணிக்கு நடைபெறவுள்ள ஆடவர் இரட்டையர் பேட்மிண்டன் போட்டியின் குரூப் சுற்றுப் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் & கிராக் ஷெட்டி இணை, இந்தோனேஷியாவின் ஃபஜர் அல்ஃபியன் & ரியான் அர்டியண்டோ இணையுடன் மோதவுள்ளது.

மாலை 06.20 மணிக்கு தொடங்கும் பெண்கள் இரட்டையர் பேட்மிண்டன் போட்டியின் குரூப் சுற்றுப் போட்டியில், அஷ்வினி பொன்னப்பா & தனிஷா க்ராஸ்டோ இணை, ஆஸ்திரேலியாவின் மபசா & யூ இணையுடன் மோதவுள்ளது.

குத்துச்சண்டை:

இரவு 07:16  மணிக்கு நடைபெறவுள்ள ஆண்களுக்கான 51 கிலோ பிரிவில் அமித் பங்கல் பங்கேற்கிரார்.

இரவு 09.24 மணிக்கு தொடங்கும், பெண்களுக்கான 57 கிலோ பிரிவில் ஜெய்ஸ்மின் லம்போரியா பங்கேற்கிறார்.

நள்ளிரவு 01.22 மணிக்கு நடைபெறும் பெண்களுக்கான 54 கிலோ பிரிவில் பிரீத்தி பவார் மோத உள்ளார்.