IND vs BAN 2nd Test Match at Kanpur : வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் செப்டம்பர் 19ஆம் தொடங்கி நடைபெற்றது.
இதில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதல் இன்னிங்ஸில் தொடக்க ஆட்டக்காரர்கள் பெரியளவில் சோபிக்காத நிலையில், அஸ்வின் அபாரமாக ஆடி 113 ரன்கள் குவித்தார். அதேபோல், இரண்டாவது இன்னிங்ஸில் அஸ்வின் 6 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.
இந்நிலையில், வருகின்ற செப்டம்பர் 27ஆம் தேதி, கான்பூரில் இரண்டாவது டெஸ்ட் போட்டி(IND vs BAN 2nd Test Match) நடைபெற உள்ளது. கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானம், கருப்பு மண் அதிகம் நிறைந்தும், புற்கள் அதிகம் உள்ளதாகவும் காணப்படுகிறது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்டில் நான்கு நாட்கள் பந்துகள் நல்லபடியாக பவுன்ஸ் ஆகியது. அதுபோல் அல்லாமல், கிரீன் பார்க் ஆடுகளம் இயற்கையாகவே தட்டையாக இருக்கும். பவுன்ஸ் குறைவாகவும், டெஸ்ட் போட்டியில் நாட்கள் ஆக, ஆக மேற்பரப்பு மெதுவாகவும் மாறும் என்றும் கூறப்படுகிறது.
கான்பூர் ஆடுகளம் சேப்பாக்கம் ஆடுகளத்திற்கு நேர்மாறானது. சேப்பாக்கத்தில், இரு அணிகளின் வேகப்பந்து வீச்சாளர்களும் சரி, ஸ்பின்னர்கள் சரி பந்து நல்ல முறையில் பவுன்ஸ் ஆனது. இரு அணிகளும் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டு விளையாடுவதற்கு பவுன்ஸ் ஒரு முக்கிய காரணமாக இருந்தது.
சேப்பாக்கம் ஆடுகளத்தில் ஸ்பின்னர்களுக்குப் போதுமான அளவில் பந்து திரும்பவில்லை என்றாலும், அனுகூலமாகவே காணப்பட்டது. பங்களாதேஷின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய ஜோடியான அஷ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
ஆனால், கான்பூர் ஆடுகளத்தின் மெதுவான தன்மை காரணமாக, இரு அணிகளின் தேர்வாளர்களும் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பதிலாக மூன்றாவது சுழற்பந்து வீச்சாளர் நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது. அதாவது குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல் ஆகியோரில் ஒருவருக்கு இந்திய அணிக்கு தேர்வாக வாய்ப்பு கிடைக்கலாம்.
இந்த போட்டியில் பங்கேற்பதற்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆனது கான்பூர்(Kanpur) செல்வதற்காக இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தன. முன்னதாக நட்சத்திர பந்து வீச்சாளரான அஸ்வின் தனி வாகனம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தார். மேலும் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி ரோஹித் சர்மா உள்ளிட்ட வீரர்கள் முன்னதாகவே புறப்பட்டு சென்று இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இரண்டு டெஸ்ட் போட்டி(IND vs BAN 2nd Test) கொண்ட தொடரில் இந்திய அணி முதல் போட்டியை வெற்றி பெற்று முன்னிலையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்று முழுமையாக தொடரை கைப்பற்றும் முனைப்பில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.