பாரீஸ் ஒலிம்பிக் 2024: 5ம் நாளான இன்று அசத்திய இந்திய வீரர்கள் யார்? யார்?
Paris Olympics 2024 : பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் லக்சயா சென் (Lakshya Sen) உலகின் முன்னணி வீரர்களில் ஒருவரான இந்தோனேசியாவின் ஜொனாடன் கிறிஸ்டியை ( Jonatan Christie) 21-18, 21-12 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
Paris Olympics 2024 : உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான 'பாரீஸ் ஒலிம்பிக் 2024' போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த போட்டிகளில் மொத்தம் 206 நாடுகளை சேர்ந்த 10,500 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
நமது இந்தியாவை பொறுத்தவரை மொத்தம் 117 வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடி வருகின்றனர். இந்தியா இதுவரை எந்த தங்கத்தையும் அறுவடை செய்யாமல் 2 வெண்கலம் வென்றுள்ளது. துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் இந்த 2 வெண்கல பதக்கத்தையும் தாய்நாட்டுக்காக வென்று கொடுத்துள்ளார்.
'பாரீஸ் ஒலிம்பிக் 2024' போட்டிகளில் இன்று இந்திய வீரர், வீராங்கனைகள் அசத்தியுள்ளனர். குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹைன் காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளார். அதாவது 75 கிலோ எடைப்பிரிவுக்கான ரவுண்ட் 16 சுற்றில் நார்வே வீராங்கனை சுனிவா ஹாப்ஸ்டாத்தை எதிர்கொண்ட லவ்லினா போர்கோஹைன், 5-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு கெத்தாக முன்னேறியுள்ளார்.
இதேபோல் டேபிள் டென்னிஸ் போட்டியில் காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில் (pre quarter final) களமிறங்கிய இந்திய வீராங்கனை ஸ்ரீஜா அகுலா(srija akula) சிங்கப்பூரின் ஜெங்க் ஜியான் (zeng jian) என்பவரை 4-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். 26 வயதான ஸ்ரீஜா அகுலாவுக்கு இன்று பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் லக்சயா சென் (Lakshya Sen) உலகின் முன்னணி வீரர்களில் ஒருவரான இந்தோனேசியாவின் ஜொனாடன் கிறிஸ்டியை ( Jonatan Christie) 21-18, 21-12 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
மேலும் இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றுள்ள இந்தியாவின் பி.வி.சிந்து பெண்கள் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் எஸ்டோனியாவை சேர்ந்த கிறிஸ்டின் குபாவை (Kristin Kuuba) 21-5, 21-10 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
'பாரீஸ் ஒலிம்பிக் 2024' போட்டிகளில் தற்போதைய நிலவரப்படி அமெரிக்கா 4 தங்கம், 12 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 27 பதக்கங்களை அறுவடை செய்துள்ளது. பிரான்ஸ் 6 தங்கம், 9 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 22 பதக்கங்களை வென்றுள்ளது. சீனா 8 தங்கம், 6 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 16 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது. ஜப்பான் 7 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 13 பதக்கங்களை வென்றுள்ளது.
What's Your Reaction?