Ravichandra Ashwin : நாகினியின் ஆட்டத்திற்கு மகுடி ஊதிய அஸ்வின் - முதல் டெஸ்டில் இந்தியா அபார வெற்றி

Ravichandra Ashwin at India vs Bangladesh 1st Test Match : ரவிச்சந்திரன் அஸ்வினின் அபார ஆட்டத்தால், வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி அபார வெற்றிபெற்றது.

Sep 22, 2024 - 18:23
Sep 22, 2024 - 20:21
 0
Ravichandra Ashwin : நாகினியின் ஆட்டத்திற்கு மகுடி ஊதிய அஸ்வின் - முதல் டெஸ்டில் இந்தியா அபார வெற்றி
வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி

Ravichandra Ashwin at India vs Bangladesh 1st Test Match : வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் செப்டம்பர் 19ஆம் தொடங்கி நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் ஃபீல்டிங் செய்ய தீர்மானித்தது. இதனையடுத்து, களமிறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் தொடக்கம் அதிர்ச்சிகரமாக அமைந்தது. ரோஹித் சர்மா (6), சுப்மன் கில் (0), விராட் கோலி (6) என அடுத்தடுத்து வெளியேறினர். இதனால், 34 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தத்தளித்தது.

விபத்தால் காயமடைந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், 634 நாட்களுக்குப் பிறகு இந்திய அணிக்கு திரும்பினார். அவர் 39 ரன்கள் எடுத்து வெளியேறினார். முதல் 4 விக்கெட்டுகளையும் வங்கதேச வீரர் ஹசன் மஹ்முத் கைப்பற்றி அசத்தினார். இதற்கிடையில், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அரைசதம் எடுத்து, 56 ரன்களுக்கு வெளியேறினார். அடுத்த ஓவரிலேயே கே.எல்.ராகுல் 16 ரன்கள் மட்டுமே எடுத்து மெஹிதி ஹசன் மிரஷ் பந்தில் வெளியேறினார்.

144 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்ததால், இந்திய அணி விரைவில் சுருண்டுவிடும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், அதன்பின் ஜோடி சேர்ந்த ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் இணை அபாரமாக ஆடியது. சிறப்பாக ஆடிய அஸ்வின் டெஸ்ட் போட்டியில் 5ஆவது சதத்தை பதிவு செய்தார்.

இதனால், தனது முதல் இன்னிங்ஸில் 376 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகப்பட்சமாக அஸ்வின் 113 ரன்களும், ஜடேஜா 86 ரன்களும் எடுத்தனர். வங்கதேசம் சார்பில் ஹசன் மஹ்முத் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனையடுத்து, களம் புகுந்த வங்கதேசம் அணி 149 ரன்களுக்குள் சுருண்டது. அதிகப்பட்சமாக ஷகிப் அல் ஹசன் 32 ரன்களும், மெஹிதி ஹசன் மிரஷ் 27 4 ரன்களையும் எடுத்தனர். இந்தியா தரப்பில் ஜாஸ்பிரிட் பும்ரா 4 விக்கெட்டுகளையும், மொஹமது சிராஜ், ஆகாஷ் தீப், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதனையடுத்து, 227 ரன்கள் முன்னிலையுடன் இரண்டவது இன்னிங்ஸில் களம் புகுந்த இந்திய அணியில் முதல் இன்னிங்ஸை போலவே, டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். ரோஹித் சர்மா (5), யஷஸ்வி ஜெய்ஸ்வால் (10), விராட் கோலி (17) எடுத்து அவுட்டாகினர். இதனால், 67 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.

அதன் பின்னர் ஜோடி சேர்ந்த சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் இணை வங்கதேச வீரர்களில் பந்துவீச்சை நொறுக்கித் தள்ளினர். ரிஷப் பண்ட் 124 பந்தில் சதம் (109) கண்டார். அதேபோல், சுப்மன் கில் 161 பந்துகளில் சதம் (119) கண்டார். இருவரும் இணைந்து 4ஆவது விக்கெட்டுக்கு 167 ரன்கள் எடுத்தனர். அதன் பின்னர் இந்திய அணி 287 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

பின்னர் 515 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம் அணி அஸ்வினின் சுழலில் சிக்கி சின்னாபின்னமானது. சொந்த மண்ணில் அபாரமாக செயல்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின், 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். வங்கதேச அணியில் அதிகப்பட்சமாக நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ 82 ரன்கள் எடுத்தார். இதனால், இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

2வது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 27ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து முதல் டி20 போட்டி அக்டோபர் 7ம் தேதியும், 2வது டி20 போட்டி அக்டோபர் 10ம் தேதியும், 3வது டி20 போட்டி அக்டோபர் 13ம் தேதியும் நடைபெற உள்ளன. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow