IND vs BAN : சாதனைகளை தகர்த்தெறிந்த அஸ்வின்.. வார்னே, மெக்ராத் எல்லாம் அப்புறம் தான்

Ravichandran Ashwin Record in IND vs BAN 1st Test : ரவிச்சந்திரன் அஸ்வின் வங்கதேச அணிக்கு எதிரான முதல் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் கைப்பற்றியதன் மூலம் பல சாதனைகளை படைத்துள்ளார்.

Sep 22, 2024 - 14:07
Sep 22, 2024 - 14:33
 0
IND vs BAN : சாதனைகளை தகர்த்தெறிந்த அஸ்வின்.. வார்னே, மெக்ராத் எல்லாம் அப்புறம் தான்
ரவிச்சந்திரன் அஸ்வின்

Ravichandran Ashwin Record in IND vs BAN 1st Test : வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் செப்டம்பர் 19ஆம் தொடங்கி நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் ஃபீல்டிங் செய்ய தீர்மானித்தது. இதனையடுத்து, களமிறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 376 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகப்பட்சமாக அஸ்வின் 113 ரன்களும், ஜடேஜா 86 ரன்களும் எடுத்தனர். வங்கதேசம் சார்பில் ஹசன் மஹ்முத் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனையடுத்து, களம் புகுந்த வங்கதேசம் அணி 149 ரன்களுக்குள் சுருண்டது. அதிகப்பட்சமாக ஷகிப் அல் ஹசன் 32 ரன்களும், மெஹிதி ஹசன் மிரஷ் 27 4 ரன்களையும் எடுத்தனர். இந்தியா தரப்பில் ஜாஸ்பிரிட் பும்ரா 4 விக்கெட்டுகளையும், மொஹமது சிராஜ், ஆகாஷ் தீப், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதனையடுத்து, 227 ரன்கள் முன்னிலையுடன் இரண்டவது இன்னிங்ஸில் களம் புகுந்த இந்திய அணி, 287 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. ரிஷப் பண்ட் 124 பந்தில் சதம் (109) கண்டார். அதேபோல், சுப்மன் கில் 161 பந்துகளில் சதம் (119) கண்டார்.

பின்னர் 515 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம் அணி அஸ்வினின் சுழலில் சிக்கி சின்னாபின்னமானது. சொந்த மண்ணில் அபாரமாக செயல்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின், 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும், 522 டெஸ்ட் விக்கெட்டுகளை பதிவு செய்தார்.

இதன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில், மேற்கிந்தியா ஜாம்பவான் கோர்ட்னி வால்ஸ் சாதனையை முறியடித்துள்ளார். வால்ஸ் 519 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

மேலும், டெஸ்ட் போட்டிகளில் அதிகமுறை 5 விக்கெட்டுகள் மற்றும் அதற்கு மேல் எடுத்தவர்கள் பட்டியலில், நியூசிலாந்து ஜாம்பவான் ரிச்சர்ட் ஹாட்லீயை முந்தி இரண்டாம் இடம் பிடித்துள்ளார். 101 போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் 37 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். ஹாட்லீ 86 போட்டிகளில் விளையாடி, 36 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.

ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னேவும் 37 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். அதனை அஸ்வின் சமன் செய்துள்ளார். முதலிடத்தில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் உள்ளார். அவர் 133 போட்டிகளில் விளையாடி, 67 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow