விளையாட்டு

நியூசிலாந்து தாக்குதலை சமாளிக்குமா? தோல்வியின் விளிம்பில் இந்தியா

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியின் விளிம்பில் உள்ளது.

நியூசிலாந்து தாக்குதலை சமாளிக்குமா? தோல்வியின் விளிம்பில் இந்தியா

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, டாம் லாதம் தலைமையில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி 16ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும், 2ஆவது டெஸ்ட் போட்டி அக்டோபர் 24ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரையிலும், 3ஆவது டெஸ்ட் போட்டி நவம்பர் 1ஆம் தேதி தொடங்கி 05ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது.

முன்னதாக, வங்கதேச அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கிலும், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கிலும் முழுமையாக கைப்பற்றியது. அதே உற்சாகத்தோடும், வெற்றி மனப்பாண்மையிலும் இந்திய அணி களமிறங்கும் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர்.

ஆனால், நியூசிலாந்தின் கட்டுக்கோப்பான பந்துவீச்சில் நிலவரம் தலைகீழாக மாறியது. கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாக, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற முதல்நாள் ஆட்டம் டாஸ் கூட போடாமல் முழுமையாக தடைபட்டது. இதனையடுத்து, முதல்நாள் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இரண்டாம் நாளில் ஆட்டம் தொடங்கப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் பேட்ஸ்மேன்களை, நியூசிலாந்து பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் திணறினர்.

ரோஹித் சர்மா 15 பந்துகளை எதிர்கொண்ட நிலையில், வெறும் 2 ரன்களை மட்டுமே எடுத்தார். அடுத்து களமிறங்கிய விராட் கோலி, வில்லியம் ஓ ரார்க் [William O’Rourke] பந்தில் கிளென் பிலிப்ஸிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட்டானார். அடுத்ததாக களமிறங்கிய சர்ஃப்ராஸ் கானும் டக் அவுட் ஆகி வெளியேறினார். இதனால், இந்திய அணி 10 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது

அதனையடுத்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். ஆனாலும் அவர்களால், நியூசிலாந்து பந்துவீச்சை எதிர்கொள்ள திணறினர். நியூசிலாந்து வீரர்கள் சரியான லெந்தில், முறையான ரிதத்தில் பந்தை எகிற வைத்தனர். இதனால், இந்திய வீரர்கள் அடி மேல் அடி வாங்கினர்.

பின்னர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 63 பந்துகளில் 13 ரன்கள் எடுத்த நிலையில், வில்லியம் ஓ ரார்க் பந்தில் வெளியேறினார். கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் டக்-அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தனர். சிறிது நேரம் நிலைத்து ஆடிய ரிஷப் பண்ட் 49 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து மேட் ஹென்றி பந்தில் வெளியேறினார்.

இதனால், இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 46 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. யூசிலாந்து அணி தரப்பில் மேட் ஹென்றி 5 விக்கெட்டுகளையும், வில்லியம் ஓ ரார்க் 4 விக்கெட்டுகளையும், டிம் சௌதி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதன் மூலம் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில், மோசமான பல சாதனைகளை படைத்தது.

இதனையடுத்து, தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி, தரமான ஆட்டத்தால் 402 ரன்களை குவித்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரச்சின் ரவீந்திரா, 157 பந்துகளில் [13 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்] 134 ரன்கள் எடுத்தார். அதிரடியாக ஆடிய டெவன் கான்வே 105 பந்துகளில் [11 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்] 91 ரன்களும், டிம் சௌதி 73 பந்துகளில் [5 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்] 65 ரன்களும் எடுத்தனர்.

இதனையடுத்து, 356 ரன்கள் பின் தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இந்திய அணி முதல் இன்னிங்ஸை போலல்லாமல், நிதானமாக ஆடியது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 35 ரன்களிலும், ரோஹித் சர்மா 52 ரன்களிலும் வெளியேற 95 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்தது.

இதன் பின் ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் சர்ஃப்ராஸ் கான் இணை சரியான பந்துகளை பவுண்டரிக்கு விரட்டியது. பின்னர், விராட் கோலி 70 ரன்களிலும் வெளியேறினார். இருவரும் இணைந்து 136 ரன்கள் சேர்த்தனர். அதன்பின் களமிறங்கிய ரிஷப் பண்ட் தொடக்கம் முதலே அதிரடியாகவே ஆடினார்.

இதற்கிடையில் சர்ஃப்ராஸ் கான் 110 பந்துகளில் தனது முதல் டெஸ்ட் சதத்தை நிறைவு செய்தார். ரிஷப் பண்ட் 55 பந்துகளில் தனது அரைசதத்தை கடந்தார். பின்னர் சரியாக 150 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சர்ஃப்ராஸ் கான் வெளியேறினார். இருவரும் இணைந்து 177 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், சதம் அடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் 99 ரன்களில் வில்லியம் ஓ ரார்க் பந்தில் போல்டானார். அப்போது இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழப்புக்கு 433 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. ஆனால், அடுத்து வந்த வீரர்கள் கே.எல்.ராகுல் (12), ரவீந்திர ஜடேஜா (5), அஸ்வின் (15) என அடுத்தடுத்து வெளியேறியதால் 462 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

பின்னர், 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு நியூசிலாந்து அணி களமிறங்கியது. 4 பந்துகள் மட்டுமே வீசப்பட்ட நிலையில், மோசமான வானிலை காரணமாக 4ஆவது நாள் ஆட்டம் முடித்துக்கொள்வதாக அறிவிக்கப்பட்டது. நாளை ஒருநாள் முழுமையாக உள்ள நிலையில், நியூசிலாந்து அணியே வெற்றிபெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஏனெனில், அந்த அணியில் டெவன் கான்வே, டேரல் மிட்செல், கிளென் பிலிப்ஸ் போன்ற அதிரடி வீரர்கள் உள்ளனர். இவர்களில் யாரேனும், அதிரடியாக ஆடி 50 ரன்கள் எடுத்தாலே, இந்தியாவின் தோல்வி உறுதியாகிவிடும். அதேபோல், வில் யங், ரச்சின் ரவீந்திரா, டாம் லேதம், டாம் பண்டல் போன்ற சிறப்பான வீரர்கள் உள்ளதால் நியூசிலாந்து அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளது.