பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு 2வது தங்கம்.. பேட்மிண்டன் போட்டியில் சாதித்த நிதேஷ் குமார்!
மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடும் போட்டியில் இந்தியா வீராங்கனை அவானி லெகாரா தங்கம் வென்று அசத்தி இருந்தார். பாராலிம்பிக் தொடரில் இந்திய அணி இதுவரை 2 தங்கம் உள்பட மொத்தம் 9 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.
பாரீஸ்: மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இந்தியாவில் இருந்து 84 வீரர்கள், 12 விளையாட்டு பிரிவுகளில் கலந்து கொண்டுள்ள நிலையில், தொடக்கம் முதலே நமது வீரர்கள் அசத்தி வருகின்றனர்.
பாராலிம்பிக் தொடரில் இந்திய அணி 1 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 8 பதக்கங்களை கைப்பற்றி இருந்த நிலையில், தற்போது இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் கிடைத்துள்ளது. அதாவது ஆண்கள் ஒற்றையர் SL3 பாரா பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை சேர்ந்த டேனியல் பெத்தேலை எதிர்கொண்டு விளையாடிய நிதேஷ் குமார், 21-14 மற்றும் 23-21 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
இதன்மூலம் நடப்பு பாராலிம்பிக்கில் இந்தியா 2வது தங்கத்தை கைப்பற்றி அசத்தியுள்ளது. மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடும் போட்டியில் இந்தியா வீராங்கனை அவானி லெகாரா தங்கம் வென்று அசத்தினார். 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிப் போட்டியில் 249.7 புள்ளிகளை பெற்று முதலிடம் பிடித்த அவர் நாட்டுக்காக தங்கப் பதக்கம் வென்று சாதித்தார்.
இதே போட்டியில் பங்கேற்று 228.7 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்த இந்திய வீராங்கனை மோனோ அகர்வால் வெண்கல பதக்கம் வென்றார், இதனைத் தொடர்ந்து தடகளத்தில் 100 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில் இந்திய வீராங்கனை பிரீத்தி பால் வெண்கலம் வென்று சாதித்தார். இதன்பிறகு 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடும் போட்டியில் இந்திய வீரர் மணீஷ் நர்வால் வெள்ளிப்பதக்கம் வென்று கலக்கினார்.
இதனைத் தொடர்ந்து இந்திய வீராங்கனை ரூபினா பிரான்சிஸ் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் எஸ்எச் 1 இறுதிப்போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார். மேலும் பெண்களுக்கான 200 மீட்டர் டி35 தடகள போட்டியில் பிரீத்தி பால் வெண்கலப் பதக்கமும், ஆடவருக்கான உயரம் தாண்டுதல் T47 போட்டியில் இந்திய வீரர் நிஷாத் குமார்வெள்ளி பதக்கமும் வென்று சாதித்தனர். பிரீத்தி பால் இந்த தொடரில் 2 வெண்கலம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பாராலிம்பிக் தொடரில் இந்திய அணி இதுவரை 2 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.
What's Your Reaction?