India vs Germany Match in Paris Olympics Schedule Today 2024 in Tamil : உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான 'பாரீஸ் ஒலிம்பிக் 2024' போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த போட்டிகளில் மொத்தம் 206 நாடுகளை சேர்ந்த 10,500 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
நமது இந்தியாவை பொறுத்தவரை மொத்தம் 117 வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடி வருகின்றனர். இந்தியா இதுவரை எந்த தங்கத்தையும் அறுவடை செய்யாமல் 3 வெண்கல பதக்கத்தை மட்டும் வென்றுள்ளது. துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் 2 வெண்கல பதக்கத்தையும் தாய்நாட்டுக்காக வென்று கொடுத்தார்.
இதேபோல் துப்பாக்கி சுடுதலில் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் பிரிவு தகுதிச்சுற்று போட்டியில், இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். இந்தியாவுக்காக பதக்கம் வெல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சீன வீராங்கனையிடம் தோல்வி அடைந்து வெளியேறினார்.
இதேபோல் பேட்மிண்டன் தொடரின் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென்னும் ஏமாற்றம் அளித்தார். இந்நிலையில், ஒலிம்பிக் தொடரில் இந்தியா இன்று முக்கியமான போட்டிகளில் மோத உள்ளது.
இந்திய நேரப்படி இன்று மாலை 3.20 மணிக்கு நடக்கும் ஈட்டி எறிதல் தகுதிச் சுற்று போட்டியில் இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ரா பங்கேற்கிறார். '2020 டோக்கியோ' ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த நீரஜ் சோப்ரா, இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் இறுதிப்போட்டிக்கு செல்வார். அவர் மீண்டும் நாட்டுக்காக தங்கம் வெல்வாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஈட்டி எறிதல் தகுதி சுற்றில் இன்று மதியம் 1.50 மணிக்கு நடைபெறும் போட்டியில் இந்தியாவின் கிஷோர் குமார் ஜெனாவும், இன்று மதியம் 2.50 மணிக்கு நடைபெறும் பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டம் ரிபிசாஜ் சுற்று போட்டியில் இந்திய வீராங்கனை கிரண் பாஹலும் கலந்து கொள்கின்றனர்.
இன்று மதியம் 1.30 மணிக்கு நடக்கும் டேபிள் டென்னிஸ் ஆண்களுக்கான பிரிவு தொடக்க சுற்றில் இந்தியா-சீனா அணிகள் மோதுகின்றன. மல்யுத்தத்தில் பெண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் வினோத் போகத் மற்றும் ஜப்பானின் கசாகி யூ பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
மிக முக்கியமாக, இன்று இரவு 10.30 மணிக்கு நடக்கும் ஆண்கள் ஆக்கி அரையிறுதி போட்டியில் இந்தியா-ஜெர்மனி அணிகள் மோதுகின்றன. ஆண்கள் ஆக்கி காலிறுதி போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை 4-2 என்ற கோல் கணக்கில் துவம்சம் செய்து அரையிறுதிக்கு வந்துள்ளது. நமது வீரர்கள் சூப்பர் பார்மில் உள்ளதால் ஜெர்மனியை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு செல்வார்களா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பாரீஸ் ஒலிம்பிக்கில்(Paris Olympics Medals) இதுவரை அமெரிக்கா 21 தங்கம், 30 வெள்ளி, 28 வெண்கலம் என மொத்தம் 79 பதக்கங்களை வேட்டையாடி முதலிடத்தில் உள்ளது. சீனா 21 தங்கம், 18 வெள்ளி, 14 வெண்கலம் என மொத்தம் 53 பதக்கங்களை வென்று 2வது இடத்தில் உள்ளது. பிரான்ஸ் 13 தங்கம், 16 வெள்ளி, 19 வெண்கலம் என மொத்தம் 48 பதக்கங்களை வென்று 3வது இடம் பிடித்துள்ளது.