Indian Hockey Team in Paris Olympics 2024 : 33-வது ஒலிம்பிக் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் இம்மாதம் 24ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெற்று வருகிறது. சுமார் 206 நாடுகளைச் சேர்ந்த 10,741 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.
பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் [Manu Bhaker] 10 மீ. ஏர் பிஸ்டல் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்று பதக்க வேட்டையை தொடங்கி வைத்தார். மேலும், பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக முதல் பதக்கம் வென்ற வீராங்கனை என்ற பெருமையை மனு பாக்கர் பெற்றார். அதேபோல், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர்களுக்கான போட்டியில், மனு பாக்கர் - சரப்ஜோத் சிங் இணை வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றது.
துப்பாக்கி சுடுதலில் ஆடவருக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் பிரிவு தகுதிச்சுற்று போட்டியில், இந்தியாவின் ஸ்வப்னில் குசாலே வெண்கலப் பதக்கம் வென்று சாதனைப் படைத்தார். இதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கையை மூன்றாக உயர்ந்தது.
நேற்று நடைபெற்ற 25மீட்டர் துப்பாக்கிச் சுடுதல், இறுதிப் போட்டியில் மனு பாக்கர், நூலிழையில் வெற்றியை தவறவிட்டார். மனு பாக்கர் போட்டியின் தொடக்கத்தில் இருந்தே, சற்று தடுமாறினார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் ஷூட் ஆஃப் முறையில் ஹங்கேரி வீராங்கனை முன்னிலை பெற்று வெண்கலம் வென்றார். மனு பாகர் 4-ம் இடம் பிடித்து பதக்கம் பெறும் வாய்ப்பை தவறவிட்டார்.
இந்நிலையில், இன்று இந்தியா - பிரிட்டன் ஹாக்கி அணிகளுக்கு இடையேயான காலிறுதிப் போட்டி நடைபெற்றது. போட்டியின் 17ஆவது நிமிடத்தில் இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் கோல் அடித்தார். இது இந்த ஒலிம்பில் தொடரில் அடிக்கும் 7ஆவது கோலாகும். அடுத்த 5 நிமிடத்தில், அதாவது போட்டியின் 22ஆவது நிமிடத்தில் பிரிட்டன் அணியின் லீ மோர்டோன் கோல் அடித்தார்.
இதனால், போட்டி சமனில் முடிந்தது. இதனையடுத்து, வெற்றியை தீர்மானிக்கும் ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில், இந்திய அணி 4-2 என்ற கணக்கில் பிரிட்டன் அணியை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. அரையிறுதியில் ஜெர்மனி அல்லது அர்ஜெண்டினா இந்திய அணி சந்திக்க உள்ளது. இதில், வெற்றிபெற்றால், கோப்பையை வெல்வது உறுதியாகிவிடும்.