பாரீஸ்: பாரீஸ் ஒலிம்பிக் 2024 போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இறுதிக்கட்டத்தை எட்டியது. ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த போட்டிகளில் மொத்தம் 206 நாடுகளை சேர்ந்த 10,500 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்தியாவில் இருந்து மொத்தம் 117 வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடி வருகின்றனர். இந்தியா இதுவரை எந்த தங்கத்தையும் அறுவடை செய்யவில்லை. வெண்கல பதக்கத்தை மட்டும் வென்றுள்ளது. துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் 2 வெண்கல பதக்கத்தையும் தாய்நாட்டுக்காக வென்று கொடுத்தார்.
இதேபோல் துப்பாக்கி சுடுதலில் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் பிரிவு தகுதிச்சுற்று போட்டியில், இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். பாரீஸ் ஒலிம்பிக்கில் நேற்று முக்கியமான போட்டிகள் அரங்கேறின. ஒலிம்பிக் மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவுக்கான அரையிறுதி போட்டி நடைபெற்றது.
இதில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் மற்றும் கியூபா நாட்டைச் சேர்ந்த குஸ்மான் லோப்ஸுடன் மோதினார். தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய வினேஷ் போகத் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் குஸ்மான் லோப்ஸை வீழ்த்தி அபார வெறி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம் இந்தியாவுக்கு தங்கம் அல்லது வெள்ளி கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
இறுதிப்போட்டியில் வினேஷ் போகத், அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த சாரா அன் ஹில்டெப்ராண்ட் என்ற வீராங்கனையை எதிர்கொள்கிறார். இந்த போட்டி இன்று நடைபெற உள்ளது. இதேபோல் இந்திய நேரப்படி நேற்று மாலை 3.20 மணிக்கு நடந்த ஈட்டி எறிதல் தகுதிச் சுற்று போட்டியில் இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ரா பங்கேற்றார். மொத்தம் 32 பேர் இந்த போட்டியில் பங்கேற்றனர்.
இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெற வேண்டுமானால், ஒரு வீரர் 84 மீட்டர் தூரம் ஈட்டி எறிய வேண்டும். இதற்காக 6 வாய்ப்புகள் வழங்கப்படும். இந்த போட்டியில் பி பிரிவில் இடம்பெற்ற நீரஜ் சோப்ரா 89.34 மீட்டர் தூரம் ஈட்டியை வீசி அசத்தினார். இதன்மூலம் அவர் நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இறுதிப்போட்டி நாளை நடக்கிறது. '2020 டோக்கியோ' ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த நீரஜ் சோப்ரா, இறுதிப்போட்டியில் தங்கம் வெல்வாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்திய நேரப்படி நேற்று இரவு 10.30 மணிக்கு நடக்கும் ஆண்கள் ஆக்கி அரையிறுதி போட்டியில் இந்தியா-ஜெர்மனி அணிகள் மோதின. காலிறுதி போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி கெத்தாக வீழ்த்தி அரையிறுதி போட்டிக்கு வந்த இந்திய அணி வெற்றி பெறும் என எதிர்பார்ப்பு நிலவியது. முதல் பாதியில் ஓரளவு இந்திய அணி வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினார்கள். இந்திய வீரர் ஹர்மன் பிரிட் ஆட்டம் தொடங்கிய 7வது நிமிடத்திலேயே முதல் கோல் அடித்து எதிர்பார்ப்பை எகிற வைத்தார்.
அடுத்து ஜெர்மனி அணி ஆட்டத்துக்குள் வந்தது. ஜெர்மனி வீரர் கன்சாலோ 23வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி ஒரு கோல் அடித்தார். இதனைத் தொடர்ந்து சிறிது நேரத்திலேயே அதாவது 27வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் கிறிஸ்டோபர் 2வது கோல் அடித்து அணியை முன்னேற்றம் அடையச் செய்தார். இதன்பிறகு இந்திய வீரர் சுக்ஜித் சிங் 36வது நிமிடத்தில் இந்தியாவுக்கு 2வது கோலை அடித்து ஆட்டத்தை சமநிலையில் கொண்டு வந்தார்.
இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிய நிலையில், இரு அணி வீரர்களும் 3வது கோல் அடிக்க போராடினார்கள். ஆனால் 54வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் மார்க்கோ 3வது கோல் அடித்து இந்திய ரசிகர்களின் மனதில் ஈட்டியை பாய்ச்சினார். இதனை சமன் செய்ய இந்திய வீரர்கள் கடைசி வரை போராடியும் முடியவில்லை. ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியது.