வெற்றியுடன் விடை பெற்றார் ஆண்டர்சன்... 40ஆயிரம் பந்துகள் வீசி சாதனை...

ஜேம்ஸ் ஆண்டர்சன் 704 விக்கெட்டுகளை கைப்பற்றி, அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வேகப்பந்து வீச்சாளர்களில் முதலிடத்தில் இருந்து வருகிறார்.

Jul 12, 2024 - 18:33
Jul 12, 2024 - 19:52
 0
வெற்றியுடன் விடை பெற்றார் ஆண்டர்சன்... 40ஆயிரம் பந்துகள் வீசி சாதனை...
வெற்றியுடன் ஓய்வுபெற்ற ஜேம்ஸ் ஆண்டர்சன்

சர்வேதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளார் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓய்வுபெற்றுள்ளார். மேற்கிந்திய தீவுகள் உடனான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 114 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டி இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் ஃபீல்டிங் செய்ய தீர்மானித்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்ஸில் 121 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக, மிக்கல் லூயிஸ் 27 ரன்களும், கெவம் ஹாட்ஜ் 24 ரன்களும், அலிக் அதன்ஷே 23 ரன்களும் எடுத்தனர். மற்ற யாரும் 20 ரன்களை தொடவில்லை.

ஜேசன் ஹோல்டர் உள்ளிட்ட 3 பேர் டக் அவுட் ஆகி வெளியேறினர். கிர்க் மெக்கன்ஷி ஒரு ரன்னிலும், ஜேடன் சீல்ஸ் 2 ரன்களிலும் வெளியேறினர். தனது கடைசி டெஸ்டில் விளையாடுவதால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஒரு விக்கெட்டை மட்டும் கைப்பற்றினார். ஆனால், அதே சமயம் தனது அறிமுகப் போட்டியில் விளையாடிய கஸ் அட்கின்ஸன் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

704 விக்கெட்டுகளை அள்ளிய ஜேம்ஸ் ஆண்டர்சன்

இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 371 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் ஜாக் கிராவ்லி 76 ரன்களும், ஜேமி ஸ்மித் 70 ரன்களும், ஜோ ரூட் 68 ரன்களும், ஓலி போப் 57 ரன்களும், ஹாரி புரூக் 50 ரன்களும் எடுத்தனர். இதனால், இங்கிலாந்து அணி 250 ரன்கள் முன்னிலை பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜேடன் சீல்ஸ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனையடுத்து, தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை. அதிகபட்சமாக குடகேஷ் மோடீ மட்டும் 31 ரன்கள் எடுத்தார். அலிக் அதனஷே 22 ரன்களும், ஜேசன் ஹோல்டர் 20 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் கஸ் அட்கின்சன் 5 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு இரு நாட்டு வீரர்களும் மரியாதை செலுத்தினர்

இந்த டெஸ்ட் போட்டியுடன் உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓய்வுபெற்றது குறிப்பிடத்தக்கது. 188 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜேம்ஸ் ஆண்டர்சன் 704 விக்கெட்டுகளை கைப்பற்றி, அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வேகப்பந்து வீச்சாளர்களில் முதலிடத்தில் இருந்து வருகிறார்.

மேலும், இந்த டெஸ்ட் போட்டியுடன் சேர்த்து ஒட்டுமொத்தமாக, 40,037 பந்துகளை ஆண்டர்சன் வீசியுள்ளார். உலக அளவில் அதிக பந்துகள் வீசிய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார். முன்னதாக முத்தையா முரளிதரன் [44,039], அனில் கும்ப்ளே [40,850], ஷேன் வார்னே [40,705] பந்துகளை வீசியுள்ளனர். ஆனால், இவர்கள் மூவருமே சுழற்பந்து வீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow