'இப்பயாவது ருத்ராஜ் கெய்க்வாட் யாருனு தெரியுதா?'.. கம்பீரிடம் கேள்வி எழுப்பும் சிஎஸ்கே ரசிகர்கள்!

''இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு சிஎஸ்கேவையும், தோனியையும் பிடிக்காது. இதனால் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக சிஎஸ்கே வீரரான ருத்ராஜ் கெய்க்வாட்டுக்கு வாய்ப்பு அளிக்கவில்லை'' என்று சிஎஸ்கே ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

Sep 7, 2024 - 21:03
 0
'இப்பயாவது ருத்ராஜ் கெய்க்வாட் யாருனு தெரியுதா?'.. கம்பீரிடம் கேள்வி எழுப்பும் சிஎஸ்கே ரசிகர்கள்!
Ruturaj Gaikwad And Gautam Gambhir

அனந்தபூர்: இந்தியாவில் உள்ளூர் கிரிக்கெட் போட்டி தொடரான 'துலீப் டிராபி' கடந்த 5ம் தேதி தொடங்கியது. ஆந்திர மாநிலம் அனந்தபூர் மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெறும் இந்த தொடர் வரும் 22ம் தேதி வரை நடைபெற உள்ளது. மொத்தம் 4 அணிகள் ஏ, பி, சி, டி என 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. 

ஏ அணிக்கு இந்திய அணியில் விளையாடும் சர்வதேச வீரர் சுப்மன் கில்லும், சி அணிக்கு ருத்ராஜ் கெய்க்வாட்டும், டி அணிக்கு ஷ்ரேயாஸ் ஐயரும் கேப்டனாக உள்ளனர்.  இந்திய அணி வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி, ஐஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோரை தவிர மற்ற அனைத்து வீரர்களும் துலீப் டிராபி தொடரில் விளையாடுகின்றனர்.

இந்நிலையில், ஆந்திர மாநிலம் அனந்தபூரில் நடந்த ஆட்டத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டி அணியும், ருத்ராஜ் கெய்க்வாட் தலைமையிலான சி அணியும் விளையாடின. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய டி அணி முதல் இன்னிங்சில் 164 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. அக்சர் படேல் மட்டும் 84 ரன்கள் எடுத்தார். பின்பு முதல் இன்னிங்சை விளையாடிய சி அணி 168 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பாபா இந்திரஜத் 72 ரன்கள் எடுத்தார்.

பின்னர் 2வது இன்னிங்சை ஆடிய டி அணி 236 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக, சி அணிக்கு 233 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. எளிய இலக்கை துரத்திய சி அணி 6 விக்கெட் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. கேப்டன் ருத்ராஜ் 48 பந்தில் 46 ரன்கள் எடுத்து வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கினார். மேலும் அவரின் சிறப்பான கேப்டன்சி வெற்றியை ஈட்டிக் கொடுத்துள்ளது.

இந்த வெற்றியை தொடர்ந்து சிஎஸ்கே ரசிகர்கள் ருத்ராஜ் கெய்க்வாட்டை சமூகவலைத்தளத்தில் புகழ்ந்து தள்ளி வருகின்றனர். ''கெய்க்வாட்டை இந்திய அணியில் எடுக்காமல் பிசிசிஐ தொடர்ந்து புறக்கணித்தது. ஆனால் இப்போது கெய்க்வாட் தான் இப்போது யார் என நிரூபித்துள்ளார். இனிமேலாவது அவரது திறமைக்கு மதிப்பு கொடுத்து இந்திய அணியில் எடுக்க வேண்டும்'' என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

வெறும் 48 ரன்கள் எடுத்த ருத்ராஜ் கெய்க்வாட்டை இந்த அளவுக்கு ரசிகர்கள் புகழ வேண்டிய அவசியம் என்ன? என்று நீங்கள் கேட்கலாம். இந்திய அணி கடந்த மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடியது. இதில் டி20 தொடரை வென்ற இந்திய அணி, ஒருநாள் தொடரில் படுதோல்வி அடைந்தது. 

வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் ருத்ராஜ் கெய்க்வாட்டுக்கு இலங்கை தொடரில் இடம் கிடைக்கவில்லை. ''இந்தியாவுக்காக உள்ளூர் தொடரிலும், வெளிநாட்டு தொடர்களிலும் சிறப்பாக விளையாடி வரும் ருத்ராஜ் கெய்க்வாட்டை எந்த ஒரு காரணமும் சொல்லி நீக்க முடியாது. ருத்ராஜ் கெய்க்வாட்டை நீக்கியது மிகப்பெரும் தவறு. இதை ஏற்றுக் கொள்ள முடியாது'' முன்னாள் வீரர்கள் தமிழ்நாட்டை சேர்ந்த கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், சுப்பிரமணியன் பத்ரிநாத் ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.

''இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு சிஎஸ்கேவையும், தோனியையும் பிடிக்காது. இதனால் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக சிஎஸ்கே வீரரான ருத்ராஜ் கெய்க்வாட்டுக்கு வாய்ப்பு அளிக்கவில்லை'' என்று சிஎஸ்கே ரசிகர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow