'இனி இப்படி பேசக்கூடாது'.. சர்ச்சை நாயகி கங்கனா ரனாவத்துக்கு பாஜக கண்டனம்!

கங்கனா ரனாவத்தையும், சர்ச்சைகளையும் பிரிக்க முடியாது. சில மாதங்களுக்கு முன்பு அவர் விவசாயிகளை பயங்கரவாதிகள் என்று குறிப்பிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சி.ஐ.எஸ்.எஃப் பெண் காவலர் ஒருவர் சண்டிகர் விமான நிலையத்தில் கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் 'பளார்' என அறைந்தது குறிப்பிடத்தக்கது.

Aug 26, 2024 - 19:36
 0
'இனி இப்படி பேசக்கூடாது'.. சர்ச்சை நாயகி கங்கனா ரனாவத்துக்கு பாஜக கண்டனம்!
PM Modi And Kangana Ranaut

டெல்லி: மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி பஞ்சாப், ஹரியானா உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தலைநகர் டெல்லி எல்லையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு போராட்டம் நடத்தினார்கள். 

மத்திய அரசு விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்க பல்வேறு முயற்சிகள் செய்தன. காவல்துறை தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டத்தை ஒடுக்க முயற்சி செய்தனர். ஆனால் விவசாயிகள் பல மாதங்கள் தீரத்துடன் போராட்டம் நடத்தினார்கள். இறுதியில் மத்திய அரசு வேறு வழியின்றி வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றதால் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.

இந்நிலையை, நடிகையும், பாஜக எம்.பி.யுமான கங்கனா ரனாவத் விவசாயிகள் போராட்டத்தை மிகவும் கொச்சைப்படுத்தி பேசினார். இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்ட அவர், ''பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தில் பாலியல் வன்கொடுமைகள் நடந்தன. கொலைகளும் அரங்கேறின. நல்ல வேளை மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றது.

இல்லையெனில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் என்ன வேண்டுமானாலும் செய்திருப்பார்கள். ஏனெனில் அதுபோன்ற திட்டத்தை தான் அவர்கள் யோசித்து வைத்திருந்தனர். விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கை எடுத்தார். போராட்டம் மட்டும் தொடர்ந்து நடந்து இருந்தால் விவசாயிகள் இந்தியாவை வங்கதேசம் போல் மாற்றி இருப்பார்கள். அண்மையில் வங்கதேசத்தில் நடந்த வன்முறை போன்று இந்தியாவிலும் வன்முறை நடந்திருக்கும்'' என்று கங்கனா ரனாவத் பேசினார்.

கங்கனா ரனாவத்தின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு நாடு முழுவதும் கண்டனங்கள் வலுத்தன. கங்கனா ரனாவத் விவசாயிகளை தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார். இதற்கு பிரதமர் மோடி, அமித் ஷா கண்டனம் தெரிவிக்காதது ஏன்? என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. கங்கனா ரனாவத்தையும், சர்ச்சைகளையும் பிரிக்க முடியாது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை பயங்கரவாதிகள் என்று குறிப்பிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சி.ஐ.எஸ்.எஃப் பெண் காவலர் ஒருவர் சண்டிகர் விமான நிலையத்தில் கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் 'பளார்' என அறைந்தது குறிப்பிடத்தக்கது.  

இந்நிலையில், தொடர்ந்து சர்ச்சையாக பேசி வரும் கங்கனா ரனாவத்துக்கு பாஜக தலைமை குட்டு வைத்துள்ளது. இது தொடர்பாக பாஜக வெளியிட்ட அறிக்கையில், ''விவசாயிகள் குறித்து கங்கனா ரனாவத் தெரிவித்த கருத்து பாஜகவின் கருத்து அல்ல; அவர் தெரிவித்த கருத்துடன் பாஜக ஒத்துப்போகவில்லை. பாஜக சார்பில்  கங்கனா ரனாவத் எந்தவித கருத்துகளையும் கூற அவருக்கு கட்சிக்கு எந்த அனுமதியும் வழங்கவில்லை. இனிமேல் இதுபோல் போன்ற கருத்துக்களை பேசக் கூடாது என்று  கங்கனா ரனாவத்திடம் வலியுறுத்தியுள்ளோம்'' என்று கூறப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow