'முதல்வர் பதவியில் இருந்து விலகுகிறேன்’.. அரவிந்த் கெஜ்ரிவால் திடீர் அறிவிப்பு!
''நான் நேர்மையானவன் என நினைத்தால் மக்கள் எனக்கு வாக்களித்து ஜெயிக்க வைக்கட்டும்; அதன்பிறகு முதல்வராக பதவியேற்பேன். நான் நேர்மையானவன் இல்லை என நினைத்தால் மக்கள் எனக்கு ஓட்டுப்போட வேண்டாம். உங்களின் (மக்கள்) வாக்குகள் தான் எனது நேர்மையை நிரூபிக்கும் சான்றிதழ்'' என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
டெல்லி: டெல்லி முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடியாக அறிவித்துள்ளார். அவர் ஏன் இப்படி திடீரென சொன்னார்? என்பது பற்றி விரிவாக காண்போம். டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பான வழக்கு சிறப்பு நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் நடந்து வந்தது. பின்பு அமலாக்கத்துறை வழக்கில் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைத்த நிலையில் , திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த கெஜ்ரிவாலை சிபிஐ அதிரடியாக கைது செய்தது. இதனால் ஜாமீன் கிடைத்தாலும் அவரால் சிறையில் இருந்து வெளியே வர முடியவில்லை. இதன்பிறகு சிபிஐ இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்து இருந்தார். உடல்நிலையை காரணம் காட்டி அவர் ஜாமீன் கேட்ட நிலையில், அதற்கு சிபிஐ கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
ஒருவழியாக நேற்று முன்தினம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைத்தது. அதாவது ரூ.10 லட்சம் பிணைத்தொகை கட்ட வேண்டும். இந்த வழக்கு தொடர்பாக பொதுவெளியில் பேசக்கூடாது என்று கூறி இரண்டு அமர்வு கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் அவருக்கு ஜாமீன் வழங்கினார்கள். சுமார் 6 மாதங்களுக்கு பிறகு கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைத்ததால் ஆம் ஆத்மி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பின்னர் சிறை வாசத்தில் இருந்து வெளியே வந்த கெஜ்ரிவாலுக்கு ஆம் ஆத்மி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். தொடர்ந்து தொண்டர்கள் முன்னிலையில் பேசிய அவர், ‘’பாஜக அரசு என்னை சிறையில் வைத்து ஒடுக்க நினைத்தது. ஆனால் நான் முன்பை விட 100 மடங்கு வலிமையுடன் இருக்கிறேன்’’ என்று உற்சாகமாக கூறியிருந்தார்.
இந்நிலையில், இன்னும் 2 நாட்களில் டெல்லி முதல்வர் பதவியில் இருந்து விலக உள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். ஆத் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் கெஜ்ரிவால் இன்று கட்சி அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், ''இன்னும் 2 நாட்களில் முதல்வர் பதவியை நான் ராஜினாமா செய்ய உள்ளேன்.
எனது வழக்கில் நான் நிரபராதி என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும். ஆனால் நிரபராதி என மக்கள் தீர்ப்பு அளிக்கும் வரை முதல்வர் நாற்காலியில் நான் அமரப்போவதில்லை. வரும் பிப்ரவரி மாதம் டெல்லிக்கு தேர்தல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆனால் நவம்பர் மாதம் மகாராஷ்டிரா தேர்தலுடன் சேர்த்து டெல்லிக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன்.
டெல்லியில் ஒவ்வொரு தெருக்களுக்கும், ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று மக்களிடம் ஆதரவு கேட்க உள்ளேன். நான் நேர்மையானவன் என நினைத்தால் மக்கள் எனக்கு வாக்களித்து ஜெயிக்க வைக்கட்டும்; அதன்பிறகு நான் முதல்வராக பதவியேற்பேன். நான் நேர்மையானவன் இல்லை என நினைத்தால் மக்கள் எனக்கு ஓட்டுப்போட வேண்டாம். உங்களின் (மக்கள்) வாக்குகள் தான் எனது நேர்மையை நிரூபிக்கும் சான்றிதழ் ஆகும்.
டெல்லிக்கு தேர்தல் நடக்கும் வரை கட்சியில் இருந்து யாராவது ஒருவர் முதல்வாராக பதவியேற்பார். இன்னும் 2 அல்லது 3 நாட்களில் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஆலோசனை நடத்தி, புதிய முதல்வர் குறித்து அறிவிக்கப்படும்'' என்றார்.
தொடர்ந்து பேசிய கெஜ்ரிவால், ''கெஜ்ரிவால் சிறையில் இருக்கும்போது ஏன் ராஜினாமா செய்யவில்லை என்று சிலர் கேட்கிறார்கள். ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என நினைத்தே சிறையில் இருக்கும்போது நான் ராஜினாமா செய்யவில்லை. எதிக்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களின் முதல்வர்கள் மீது வழக்கு போடுவதை பாஜக இப்போது ஒரு பார்முலாவாக வைத்துள்ளார்கள்.
பினராயி விஜயன் (கேரள முதல்வர்), சித்தராமையா (கர்நாடக முதல்வர்) மீது வழக்குகளை போட்டுள்ளார்கள். சிறையில் இருந்து ஏன் ஆட்சியை நடத்த முடியாது?என உச்சநீதிமன்றமே தெரிவித்துள்ளது. ஆகவே உங்கள் மீது பாஜக வழக்கு தொடர்ந்தால், நீங்கள் பதவியை ராஜினாமா செய்யாதீர்கள் என்று பாஜக அல்லாத மாநிலங்களை ஆட்சி செய்யும் முதல்வர்களுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன்'' என்று கூறியுள்ளார்.
What's Your Reaction?