வீடியோ ஸ்டோரி

சீறும் தலைமை? சீரியஸான மாண்புமிகு? சிதறும் தொகுதிகள்..?

கட்சியின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த புதுப் புது மாவட்ட பொறுப்பாளர்களை திமுக தலைமை நியமித்து வருகிறது. இந்நிலையில் ஆறு தொகுதிகளை வைத்திருக்கும் தலைநகர் அமைச்சரிடம் இருந்து 3 தொகுதியை வேறொருவருக்கு கொடுக்க அறிவாலயம் ஐடியா செய்து வருவதாக கூறப்படும் தகவல் ஹைலைட்டாகி உள்ளது.

சீறும் தலைமை? சீரியஸான மாண்புமிகு? சிதறும் தொகுதிகள்..?
சீறும் தலைமை? சீரியஸான மாண்புமிகு? சிதறும் தொகுதிகள்..?

2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெறுங்கி வரும் நிலையில், கட்சியை வலுப்படுத்த அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் ஆகியோரின் அதிகாரத்தைப் பறித்து புதுப் புது மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து வருகிறது அறிவாலயம்.

கட்சி ரீதியாக 72 மாவட்டங்களாக செயல்பட்டு வந்த தி.மு.கவின் உள்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த முடிவு செய்துள்ளது கட்சித் தலைமை. அதன் எதிரொலியாக ஈரோடு, திருப்பூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை மேலும் பிரித்து மாவட்டங்களின் எண்ணிக்கையை 76 ஆக உயர்த்தியுள்ளது. இந்த நடவடிக்கைகள் நிர்வாக வசதிக்காகவும், கட்சியை வலுப்படுத்தவும் என்று சொல்லப்பட்டாலும் பதவி கிடைக்காதவர்களும், பதவியை பறிகொடுத்தவர்களும் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது

அந்த வகையில், ஏற்கனவே சென்னைக்கு மட்டுமே 6 மாவட்டச் செயலாளர்கள் இருந்தாலும், தேர்தல் நேரங்களில் வாக்கு சதவிகிதம் குறைவது எப்படி? அமைச்சர்கள் களத்தில் இறங்காமல் என்ன செய்துக் கொண்டிருக்கிறார்கள்? மாவட்ட வேலைகளை கவனிப்பதை விட மாவட்டச் செயலாளர்களுக்கு அப்படி என்ன முக்கிய வேலை இருக்கின்றது? என திமுக தலைமை ஏகத்துக்கும் கோபத்தில் இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளராக உள்ள அமைச்சர் சேகர்பாபுவின் ஆறு தொகுதிகளில் மூன்றைப் பிரித்து புதிய மாவட்டச் பொறுப்பாளரை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பெரம்பூர், எழும்பூர், திருவிக நகர், துறைமுகம், வில்லிவாக்கம், கொளத்தூர் ஆகிய ஆறு தொகுதிகள் அடங்கிய சென்னை கிழக்கிற்கு மாவட்ட செயலாளராக இருப்பவர் தான் அமைச்சர் சேகர்பாபு. 

இவருடைய ஆறு தொகுதிகளில் மூன்றைப் பிரித்து புதிய மாவட்ட பொறுப்பாளரை நியமிக்க தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த பிரிப்பில் வி.ஐ.பி. தொகுதியான கொளத்தூர் தொகுதியும் இருப்பதால், அந்த தொகுதி தன் பொறுப்பை விட்டுப் போய்விடுமோ என்கிற அச்சம் அமைச்சருக்கு ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர் உடன்பிறப்புகள்.  இதையடுத்து, தனது மாவட்டத்தை பிரிக்கக் கூடாது என்று அமைச்சர் மேலிடத்துக்கு அழுத்தம் கொடுத்ததாகவும், அதற்கு தலைமை அசைந்து கொடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

இதனால் தலைமை மீது அமைச்சர் சேகர்பாபு அதிருப்தியில் இருப்பதாகவும் அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவிலேயே அடுத்த கட்ட மாவட்டச் செயலாளர்கள் மாற்றப் பட்டியலை எதிர்ப்பார்க்கலாம் என்று கூறப்படும் நிலையில், இளைஞரணி நிர்வாகியும் சிட்டிங் எம்.எல்.ஏவுமான ஏ.எம்.வி. பிரபாகர் ராஜாவின் பெயர் அந்த பட்டியலில் இடம்பெற உள்ளதாக கூறப்படுகிறது. 

அமைச்சர் சேகர்பாபுவிடம் இருந்து தொகுதிகள் பறிக்கப்படுகிறதா? இல்லையா? பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்...