உலகம்

ஹார்முஸ் நீரிணை எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது..! பரபரப்பை கிளப்பிய டிரம்ப்!

By Christon
12 Aug 2026, 09:21 PM
ஹார்முஸ் நீரிணை தங்கள் முழு கட்டுப்பாட்டில் உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு இடையே, உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் நீரிணையை அமெரிக்கா தனது "முழு கட்டுப்பாட்டில்" வைத்துள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) சமூக வலைதளப் பக்கத்தில் இது குறித்துப் பதிவிட்டுள்ள டிரம்ப், ஹார்முஸ் நீரிணை அமெரிக்காவின் முழு கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அதனைத் தொடர்ந்து தங்கள் வசமே வைத்திருக்கப் போவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஈரானிடம் விமானப்படை, கடற்படை என்று எதுவுமே இல்லை. அவர்களிடம் இருக்கும் ராணுவ வீரர்களுக்கு ஊதிய பாக்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அதனால், ஈரானால் எதுவுமே செய்ய முடியாது என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

மேலும், ஈரான் ராணுவத்தின் பலம் வெகுவாகக் குறைந்துவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், அந்நாட்டில் கடும் பணவீக்கம் நிலவி வருவதாகவும், ஈரான் வெறும் பேச்சு மட்டுமே பேசுவதாகவும் விமர்சித்துள்ளார்.

உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் வர்த்தகம் பயணிக்கும் இந்த ஹார்முஸ் நீரிணையில் ஏற்படும் எந்தவொரு தடையும், உலகளாவிய ஆற்றல் சந்தை மற்றும் பொருளாதாரத்தில் உடனடி தாக்கத்தை ஏற்படுத்தும். ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகளுக்கு இடையே கடந்த சில வாரங்களாக நிலவி வரும் மோதல் போக்கு காரணமாக, சர்வதேசக் கப்பல் போக்குவரத்தில் பதற்றம் நீடித்து வருகிறது.

பதற்றத்தைக் குறைக்க இரு நாடுகளுக்கும் இடையே மறைமுக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், டிரம்ப் வெளியிட்டுள்ள இந்த அதிரடி அறிக்கை, தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகளில் மேலும் சிக்கலை உருவாக்கக்கூடும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இருப்பினும், அப்பகுதியில் வர்த்தகக் கப்பல்களின் போக்குவரத்து தீவிர பாதுகாப்பு கண்காணிப்புடன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.