கொலம்பியாவில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல நகரங்களில் கட்டடங்கள் இடிந்து விழுந்து பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதுடன், விமானச் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் மற்றும் கொலம்பியப் புவியியல் சேவை அமைப்பின் தகவல்படி, இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.4-ஆகப் பதிவாகியுள்ளது. தலைநகர் போகொடாவிலிருந்து 400 கி.மீ மேற்கே உள்ள சான் ஜோஸ் டெல் பால்மர் அருகே 96 கி.மீ ஆழத்தில் இதன் மையம் அமைந்திருந்தது.
இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் பக்கத்து நாடுகளான வெனிசுலா மற்றும் ஈக்வடார் வரையிலும் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் பெரெய்ரா நகரில் 18 பேரும், மணிசாலேஸில் இருவரும் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காளி நகரில் 20 கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் பலர் உள்ளே சிக்கியுள்ளனர். பெரெய்ரா, மணிசாலேஸ், குய்ப்டோ உள்ளிட்ட பல விமான நிலையங்களில் சேதம் ஏற்பட்டதால் விமானச் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கொலம்பிய அதிபர் அபெலார்டோ டி லா எஸ்ப்ரியல்லா, மீட்புப் பணிகளை நேரில் மேற்பார்வையிடவும் அவசரக்கால மையத்தை அமைக்கவும் உத்தரவிட்டுள்ளார். நிலைமையைக் நேரில் ஆய்வு செய்யத் தாம் பெரெய்ரா நகருக்குச் செல்லவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சோகோ மற்றும் ரிசாரல்டா மாகாண ஆளுநர்கள் தங்கள் பகுதிகளில் கட்டடங்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளதாகவும், மேலதிக நில அதிர்வுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர். அதேவேளையில் தலைநகர் போகொடாவில் பெரிய அளவில் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என அந்நகர மேயர் தெரிவித்துள்ளார்.