உலகம்

"எந்த கப்பலுக்கும் அனுமதி கிடையாது.." ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அறிவிப்பு!

By Christon
11 Jun 2026, 07:13 AM
ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், உலகின் மிக முக்கிய கடல் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) அனைத்து வகையான கப்பல் போக்குவரத்திற்கும் மூடுவதாக ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது.

அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அமெரிக்கா நேற்று ஈரான் மீது புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. "ஈரான் எங்களை ஏமாற்றப் பார்க்கிறது, அவர்களுக்குக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும்" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்திருந்தார்.

இதற்குப் பதிலடியாக, ஈரானின் தெற்குப் பகுதியில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல முயன்ற இரண்டு கப்பல்கள் மீது ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும், போர் நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறிவிட்டதாகக் கூறி, ஹார்முஸ் ஜலசந்தி இனி முழுமையாக மூடப்படுவதாக ஈரான் அறிவித்துள்ளது.

கப்பல்களுக்குக் கடுமையான எச்சரிக்கை

ஈரானின் 'காதம் அல்-அன்பியா' ராணுவக் கட்டளையகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஹார்முஸ் ஜலசந்தி வழியாகப் பயணிக்க முயலும் எண்ணெய் டாங்கர்கள் மற்றும் வர்த்தகக் கப்பல்கள் உள்ளிட்ட அனைத்து வகையான கப்பல்களும் இலக்கு வைக்கப்பட்டுச் சுடப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. பாரசீக வளைகுடா (Persian Gulf) மற்றும் ஓமன் கடல் பகுதிகளில் நங்கூரமிட்டுள்ள எந்தவொரு கப்பலும் தங்களது இடத்தை விட்டு நகர வேண்டாம் என்றும், இந்த எல்லையை மீறி வரும் கப்பல்கள் எதிரிக்கு ஆதரவானதாகக் கருதப்படும் என்றும் ஈரான் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தொடரும் குண்டுவெடிப்புகள்

ஏற்கனவே கடந்த செவ்வாய்க்கிழமை ஈரானின் வான் பாதுகாப்பு மற்றும் ரேடார் தளங்களை அமெரிக்கப் படைகள் குண்டுவீசி அழித்திருந்தன. இந்தச் சூழலில், ஈரானின் தெற்குப் பகுதி மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியை ஒட்டியுள்ள இடங்களில் மீண்டும் பயங்கர குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த முக்கிய கடல் வழித்தடம் மூடப்பட்டுள்ளதால், உலகளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.