சிறையில் தனது உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருவதாகவும், தான் உயிருடன் வெளியே திரும்ப முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் வேதனை தெரிவித்துள்ளார். தனக்கும் தனது மனைவி புஷ்ரா பீபிக்கும் உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க உத்தரவிடக் கோரி, அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு அவர் திறந்த மடல் ஒன்றை எழுதியுள்ளார்.
கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 74 வயதான இம்ரான் கான், அடியாலா சிறையில் தன்னைச் சந்தித்த வழக்கறிஞர் சல்மான் சஃப்தர் மூலமாக இந்தக் கடிதத்தை வெளியிட்டுள்ளார். அந்தக் கடிதத்தில், நீண்ட நாட்களாகத் தனிமைச் சிறையில் வைக்கப்பட்டிருப்பதும், மனிதர்களுடன் பேச முடியாத சூழலும் தனது மனநலத்தைப் பாதித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தனிமை காரணமாகத் தனக்குக் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ள இம்ரான் கான், தனது இதயம் ஏற்கனவே பாதிக்கப்பட்டுவிட்டதாகவும், மூளை ரத்தக்கசிவு மற்றும் மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 74 வயதில் தன்னை இந்த அரசு உயிருடன் திரும்ப முடியாத இடத்திற்குத் தள்ளிக்கொண்டிருப்பதாகவும், நீதிமன்ற உத்தரவுகளை மீறித் தனது குடும்பத்தினருடனும், சிறையில் உள்ள மனைவியுடனும் பேச அனுமதி மறுக்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
ஊழல் வழக்கு ஒன்றில் 2025 ஜனவரி முதல் சிறையில் உள்ள தனது மனைவி புஷ்ரா பீபியின் கண்பார்வை குறைந்து வருவது குறித்தும் இம்ரான் கான் கவலை தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் புஷ்ரா பீபிக்குக் கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், மீண்டும் அவர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு, மருத்துவர்களைச் சந்திக்கவோ மருத்துவ அறிக்கைகளைப் பெறவோ அனுமதி மறுக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
சவுதி இளவரசர் வழங்கிய விலையுயர்ந்த நகைகளை வாங்கிய 'தோஷகானா-2' வழக்கில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற வழக்குகளில் விதிக்கப்பட்ட தண்டனைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், தன் மீதான வழக்குகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என அவரது கட்சி தொடர்ந்து கூறி வருகிறது.
இந்தச் சூழலில், தனக்கு எந்தச் சலுகையும் தேவையில்லை என்றும், ஏற்கனவே உச்ச நீதிமன்றம் பிறப்பித்த மருத்துவ சிகிச்சை தொடர்பான உத்தரவுகளை முறையாக அமல்படுத்தி, தனக்கும் தன் மனைவிக்கும் உரிய சிகிச்சை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் தலைமை நீதிபதிகளிடம் இம்ரான் கான் கோரிக்கை விடுத்துள்ளார்.