உலகம்

“என்னை கொடூரமாகப் பாலியல் வன்கொடுமை செய்தார்!” டிரம்ப் மீது முன்னாள் மிஸ் சுவிட்சர்லாந்து பரபரப்பு புகார்!

By Sumalekha
27 Oct 2026, 05:51 PM
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது முன்னாள் மிஸ் சுவிட்சர்லாந்து பியாட்ரிஸ் கியூல் (Beatrice Keul) சுமத்தியுள்ள பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு சர்வதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1993-ம் ஆண்டு நியூயார்க்கில் உள்ள பிளாசா ஹோட்டலில் இந்தச் சம்பவம் நடந்ததாக அவர் கூறியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டு, பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான டிரம்ப்பின் தொடர்புகள் குறித்து அமெரிக்க நாடாளுமன்ற ஜனநாயகக் கட்சியினர் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

1993-ல் நடந்தது என்ன?

1993 நவம்பரில், அப்போது இளம் மாடலாகவும் நிதிச் சேவைத் துறையில் பணியாற்றியவராகவும் இருந்த கியூல், டிரம்ப் ஏற்பாடு செய்த அழகிப் போட்டியில் பங்கேற்க அழைக்கப்பட்டதாக அந்த அறிக்கை கூறுகிறது. அட்லாண்டிக் சிட்டி மற்றும் நியூயார்க்கில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 16 முதல் 22 வயதுடைய போட்டியாளர்கள் பங்கேற்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்போது டிரம்ப்புக்குச் சொந்தமான பிளாசா ஹோட்டலில் நடைபெற்ற மதிய விருந்தின்போது, டிரம்ப் தன்னை அணுகி அறிமுகப்படுத்திக்கொண்டதாக கியூல் தெரிவித்துள்ளார்.

அன்றைய தினம், டிரம்ப்பைச் சந்திக்கலாம் எனக் கூறி அவரது பிரதிநிதி ஒருவர் தன்னை ஹோட்டலின் மேல்தளத்தில் இருந்த அறைக்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு டிரம்ப் தன்னைப் பின்புறத்திலிருந்து பிடித்து வலுக்கட்டாயமாகப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். தனது ஆடை கிழிக்கப்பட்டதாகவும், காயங்களுடன் ரத்தம் வழிந்ததாகவும் கூறியுள்ள அவர், அந்தச் சம்பவத்தைக் கொடூரமானது என விவரித்துள்ளார்.

“வாயைத் திறக்காதே!” — மிரட்டப்பட்டாரா?

தனது குற்றச்சாட்டின்படி, சம்பவத்துக்குப் பிறகும் அமெரிக்க விசா மற்றும் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் (NYU) சேர்க்கை பெற்றுத் தருவதாக டிரம்ப் கூறியதாக கியூல் தெரிவித்துள்ளார். மேலும், நடந்ததை வெளியில் சொல்லாமல் இருக்குமாறு தன்னிடம் உறுதிமொழி பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

போட்டியில் பங்கேற்பதைத் தொடர்ந்ததாகவும், அச்சத்தில் உறைந்துபோன நிலையில் இருந்ததாகவும் கியூல் தெரிவித்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. போட்டி முடியும் வரை தனது பாஸ்போர்ட்டைத் திரும்பக் கேட்க அஞ்சியதாகவும் அவர் கூறியுள்ளார்.

களத்தில் இறங்கிய எப்ஸ்டீன்!

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, ஜெஃப்ரி எப்ஸ்டீன் தன்னை அணுகி, “நான் ஜெஃப்ரி, டானின் நெருங்கிய நண்பன்” என்று அறிமுகப்படுத்திக்கொண்டதாகக் கியூல் தெரிவித்துள்ளார். அமெரிக்க விசா மற்றும் பல்கலைக்கழகச் சேர்க்கைக்கு உதவுவதாகக் கூறியதுடன், டிரம்ப்பின் மார்-ஏ-லாகோ மாளிகையில் நடைபெறும் விருந்துக்கு வருமாறும் அழைத்ததாக அவர் கூறியுள்ளார்.

பின்னர் சுவிட்சர்லாந்துக்குத் திரும்பிய கியூல், ஹவாயில் நடைபெறவிருந்த மற்றொரு டிரம்ப் ஆதரவு அழகிப் போட்டியில் பங்கேற்க மறுத்ததாக அறிக்கை தெரிவிக்கிறது. சில மாதங்களுக்குப் பிறகு டிரம்ப் மீண்டும் தொடர்புகொண்டு விசா மற்றும் பல்கலைக்கழகச் சேர்க்கைக்கு உதவுவதாகக் கூறியபோதும், அதை அவர் ஏற்கவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டை மறுக்கும் வெள்ளை மாளிகை!

இந்தக் குற்றச்சாட்டுகளை வெள்ளை மாளிகை திட்டவட்டமாக மறுத்துள்ளது. “இந்தக் குற்றச்சாட்டுகள் எதுவும் உண்மையல்ல” என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் லாரன் பிஸ் கூறியதாக People இதழ் தெரிவித்துள்ளது.

மேலும், டிரம்ப்பின் சாதனைகளிலிருந்து அமெரிக்க மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப ஜனநாயகக் கட்சியினர் மேற்கொள்ளும் முயற்சியே இந்த அறிக்கை என்றும் வெள்ளை மாளிகை விமர்சித்துள்ளது. எப்ஸ்டீன் மோசமான நபர் என்பதால் அவரை மார்-ஏ-லாகோ கிளப்பிலிருந்து டிரம்ப் வெளியேற்றியதாகவும் வெள்ளை மாளிகை தரப்பு கூறியுள்ளது.

அறிக்கையில் குற்றச்சாட்டு இடம்பெற்றிருப்பது மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டதாகாது. இந்த விவகாரத்தில் கியூல் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக டிரம்ப் மீது குற்றவியல் வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவில்லை என அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுகள் குறித்து வெள்ளை மாளிகை மறுப்புத் தெரிவித்துள்ள நிலையில், இந்த விவகாரம் அரசியல் மற்றும் சட்டரீதியான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.