தமிழ்நாடு

RATHAVETTAI EPISODE 16 : போலீஸையே மிரள வைத்த வெள்ளை ரவியின் சாம்ராஜ்ஜியம்!

By Santhosh V
22 Nov 2026, 07:30 PM
ரத்தவெட்டை பாகம் 16 : வடசென்னையின் ரவுடியிச வரலாற்றில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய ஒரு தாதாவின் எழுச்சி, எதிரிகளுடனான மோதல், காவல்துறையின் தேடுதல் வேட்டை என பல அதிர்ச்சிகரமான திருப்பங்களைக் கொண்ட அந்த வாழ்க்கையின் பின்னணி என்ன? முழுமையாகப் பார்க்கலாம்...

இந்திய ரவுடிகளின் சாம்ராஜ்ஜியம், அப்படியொரு காட்சியை அதற்கு முன் பார்த்ததில்லை. பிளேடு பக்கிரிகளும், கழுத்தறுக்கும் கயவாலிகளும் 'மாமே நான் காணுறது ரீலா இல்ல ரியலா?' என்று ஷாக் ஆனார்கள். ரவுடிகள் தரும் மாமூல் பணத்தில் கொழுத்த காக்கிச்சட்டைகளோ. 'க்கும்... இனி நம்ம கல்லா காலிதான்' என்று டென்ஷன் ஆனார்கள்.

அந்தக் காலத்து மெட்ராஸை தங்களின் ரவுடியிஸத்தால் சிதறவிட்டுக்கொண்டிருந்த இரண்டு தாதாக்கள் வெள்ளை ரவி மற்றும் சேரா. இவர்களால் சென்னையில் வெட்டுக்குத்து, கொலை நடக்காத நாளே இல்லை. இவர்கள் அடங்கினால்தான் ஊரும் அடங்கும் எனும் நிலையில், இந்த இரண்டு பேரையும் நண்பர்களாக்கி கைகுலுக்க வைத்தார் ஒரு காவல்துறை அதிகாரி. பரஸ்பரம் ஒருவரின் தலையை இன்னொருவர் மாறி மாறி சீவ துடித்துக் கொண்டிருந்த தாதாக்கள் இருவரையும் ஒரே இளநீரில் இரண்டு ஸ்ட்ரா போட்டு குடிக்க வைத்து நட்பையும், அமைதியையும் உறுதி செய்ய வைத்தார் அந்த அதிகாரி. (உண்மையிலேயே அப்படி ஒரே இளநீரை இருவரும் குடித்தனர்). இந்தக் காட்சியை பார்த்துவிட்டுதான் வெள்ளை ரவி தரப்பு ரவுடிகளும், சேரா தரப்பு ரவுடிகளும் ஷாக்கில் மெர்சலாகினர்.

பிறகு தங்களுக்குள் கட்டிக்கொண்டு சரக்கு விருந்து கொண்டாடினர். ஆனால், அந்த விருந்தின் இறுதி நிமிடங்களில் இரு தரப்பிலும் சிலர் வெட்டிக்கொண்டு, ரத்தம் வடிய வடிய சியர்ஸ் அடித்ததுதான் ஹாட் ஹைலைட்டே 'நண்பேண்டா' என்று கைகுலுக்கிய சில மணி நேரங்களிலேயே மீண்டும் மூண்டது யுத்தம். மறுபடியும் வெள்ளை ரவியும், சேராவும் அதகள அட்ராசிட்டியைத் துவக்கினர்.

இந்த இடத்தில் மீண்டும் உங்களுக்கு ஒரு டவுட் வரவேண்டும்! இந்த எபிஸோடில் நாம் சந்திக்கப்போவது சேராவையா அல்லது வெள்ளை ரவியையா? என்பதுதான். சீட்டுக் குலுக்கிப் போட்டத்தில் வந்து விழுந்த பெயர் 'வெள்ளை ரவி. ஆக அவர் கதையையே பேசுவோம்.

வெள்ளை ரவி பற்றி அறிய வடசென்னையின் சீனியர் மோஸ்ட் கம்யூனிஸ்ட் புள்ளி ஒருவரை சந்தித்துப் பேசினோம். தாதாவை பத்தி காம்ரேட்டிடம் ஏன் கேட்கணும்? எனும் கேள்விக்கு அவரது பதிலின் இரண்டாம் பாராவில் இருக்கிறது விளக்கம்...

"1980கள்ல இருந்து பல வருஷங்கள் தமிழ்நாடு, கர்நாடகான்னு கதிகலக்குனவன்பா வெள்ளை ரவி. அவன் தாதாவா வளர்ந்த கதையே தனி. பர்மாவுக்கு பொழைக்கப் போன நம்ம பழைய ஆளுங்க, 1960 வாக்குல தாய்மண்ணுக்கு திரும்பி வந்தாங்க அவங்களுக்கு சென்னை வியாசர்பாடி பக்தவச்சலம் காலனியில குடிசைகள் போட்டுத் தரப்பட்டுச்சு. கொஞ்ச நாள்ல அது பி.வி.காலனி என அழைக்கப்பட்டது. இங்கே இருக்கிற குளம் மற்றும் அதன் கரையை வெச்சு நிறைய சட்டவிரோத செயல்கள் நடந்துட்டு இருந்துச்சு. போதைப்பொருள் கசக்குறதுல துவங்கி எல்லா பொறம்போக்குத்தனங்களும் நடக்கும்.

இந்த ஏரியா மக்களிடம் ரெண்டு பிரிவு. ஒண்ணு தெற்கிலிருந்து வந்து இங்கே செட்டிலான ஆதிக்க சாதி, அடுத்து பர்மாவிலிருந்து வந்த மற்றும் இங்கேயே வாழ்ந்த பட்டியலின மக்கள். அந்த ஆதிக்க டீம்ல சுப்பையான்னு ஒருத்தன் இருந்தான். அடிதடி, மிரட்டல்னு தாட்டியமான ஆளு அவனும் அவன் டீமும் இந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கடன் கொடுத்து, அநியாய வட்டி வசூல் பண்ணினாங்க.

சுப்பையா டீமுக்கு எதிராவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகவும் குரல் கொடுக்க களமிறங்கினான் பெஞ்சமின்னு ஒருத்தன். அவரது கம்யூனிஸ சித்தாந்தம், செயல்பாடுகளை பார்த்துட்டு இளைஞர் டீம் ஒண்ணு அவன் கூட சேர்ந்துச்சு. அதுல ஒருத்தன் ரவி. ஆமாம்பா... ரவிக்கு ஆரம்பத்துல கம்யூனிஸம் பிடிச்சுது. ஆனா, என்னைக்கு அவனுக்கு சுத்தி பிடிச்சுதோ அப்பவே கம்யூனிஸம் அவனை வெளியில விரட்டிடுச்சு.

மக்களுக்காக உரிமைக்குரல் கொடுக்க கிளம்பின பெஞ்சமினை அடாவடி சுப்பையா டீம் ஓவரா சீண்டிட்டானுங்க. இதுல ஒரு கட்டத்துல பெஞ்சமினே கத்தியை தூக்கிட்டான். ரெண்டு தரப்புக்கும் நடுவுல அடிக்கடி உரசல். சுப்பையா டீம் ஏற்கெனவே ரவுடியிஸத்துல ஊறுனவங்கன்றதால பெஞ்சமின் தரப்புக்கு ஏகப்பட்ட சேதம். 'சரி இவன் கதையை முடிச்சாதான் இங்கே பொழைக்க முடியும்ங்கிற முடிவுக்கு பெஞ்சமின் வந்துட்டார். சில தடவை ட்ரை பண்ணியும் அவரால சுப்பையாவ கொல்ல முடியல. இதை கவனிச்சுட்டே இருந்த ரவி, 'வாத்யாரே நீ ஏன் சிரமப்படுற. வுடு, நான் அவனை முடிக்கிறேன்'னு சொல்லி கத்தியை கைல தூக்குனான்.

ஒரு சமயம் உடம்புக்கு முடியாம இருந்த சுப்பையா, கவர்மென்ட் ஆஸ்பத்திரியில அட்மிட் ஆனான். அங்கே வெச்சு அவனை முடிக்கிறதுன்னு முடிவு பண்ணுனான் வெள்ளை ரவி. ஹாஸ்பிடலுக்குள்ள போன ரவி, சுப்பையா அட்மிட் ஆகியிருந்த வார்டுக்கு போனான். கையில சாத்துக்குடி, ஹார்லிக்ஸ்னு இருந்துச்சு. சுப்பையாவை நலன் விசாரிக்க வந்த மாதிரி போனவன், சட்டுன்னு பொருளை உருவி வீசி தள்ளிட்டான். இந்தக் கொலையில மெட்ராஸே பதறிடுச்சு.

விசாரணைக்கு வந்த போலீஸ் அங்கேயிருந்த டாக்டர், நர்ஸ்ட்ட கொலைகாரன் எப்படி இருந்தான்?ன்னு கேட்டப்ப 'வெள்ள வெளேர்னு இருந்தான் சார் அந்த கொலகாரன். ஆனா மனசுல கொஞ்சம்கூட ஈரமே இல்லாம கொன்னான். உயிரு போற வரைக்கும் குத்திக்கிட்டே இருந்தான்'ன்னு சொல்ல, போலீஸே மிரண்டிடுச்சு.

இந்த சம்பவத்துக்குப் பிறகு பெஞ்சமின் டீம்ல மட்டுமில்லை, பி.வி. காலனி, வடசென்னைன்னு ரொம்ப ஃபேமஸானான் ரவி. சுப்பையா சாவோடு அந்த சண்டை முடிஞ்சுடல காரணம் வெள்ள ரவி கொன்னது ரவுடி சேராவின் சித்தப்பாவைதான். சேரா யாருன்னா ஒருகாலத்துல அவன் போலீஸ். ஆனால், தன் தாதா சித்தப்பா சுப்பையா கூடவே சுத்திட்டு இருந்ததாலே டிபார்ட்மென்ட்ல இருந்து டிஸ்மிஸ் பண்ணிட்டாங்க. சித்தப்பனுக்காக வேலையையே இழந்தவன், சித்தப்பனை கொன்னவனை சும்மாவா விடுவான்? 'வெள்ள ரவியை வெட்டுவேன்டா'ன்னு பொங்கி எழுந்தான் சேரா. ஆனா, ரவியை அவனால ஒண்ணும் பண்ண முடியலை. அந்த கோபத்துல ஸ்கெட்ச் போட்டு பெஞ்சமினை போட்டுத் தள்ளிட்டான். இதுல டென்ஷனான வெள்ளை ரவி, சேரா குரூப்பில் சிலரை முடிச்சுட்டான். பெஞ்சமினை கொன்னதாலே அவனுக்கு பின்னாடி இருந்த ரவுடிகள், உரிமை போராளிகள் எல்லாருமே வெள்ளை ரவிக்கு பின்னாடி வந்து நின்னாங்க. இதனால் ரவியோட படை பலம் பெருகுச்சு. இந்த தைரியத்துல நிறைய சம்பவங்களை பண்ணினான்.

அடுத்தடுத்து அதிரடி கொலைகளால் எடுத்த எடுப்பிலேயே ஏ பிளஸ் கேட்டகிரி பாஸ் பண்ணான் வெள்ளை ரவி. அவன் பண்ணுன சம்பவங்களில் பல அசாதாரணமான சம்பவங்கள் தான். நாகர்கோவிலில் ரவுடி லிங்கத்தை சிறைக்குள் ஏறிக் குதித்து சென்று கொன்னது, சென்னை எழும்பூரில் மாஜிஸ்திரேட் முன்னாடி கூண்டிலேயே வைத்து விஜிங்கிறவனை போட்டதுன்னு லிஸ்ட் போட்டுனே போலாம்.

வெள்ளை ரவியின் டீமில் இருந்த ஒவ்வொருவரையா சேரா கொன்னான். இதற்கு பதிலடியா சேராவின் முக்கிய கைகளான ஆசைத்தம்பி, மனோ இருவரையும் தூக்கும் முடிவுக்கு வந்த ரவி, அதுக்காக இறங்கி சம்பவங்களை பண்ண ஆரம்பிச்சான். இதனால ரெண்டு தரப்புலேயும் நிறைய ரத்தம் தெறிச்சுது. இந்த உக்கிர சூழ்நிலையில் வெள்ளை ரவியும், சேராவும் நேருக்கு நேரா இறங்கி மோத ஆரம்பிச்சாங்க, மிகப்பெரிய கேங் வார் உருவாச்சு.

புகார் அதிகமானதால ரெண்டு பேரையும் என்கவுன்டர்ல முடிச்சுட சொல்லி மேலிருந்து உத்தரவு. போலீஸும் அதுக்கு ரெடியானாங்க. இதை ஸ்மெல் பண்ணின ரெண்டு பேரும் 'நாங்க திருந்தி வாழப்போறோம்'னு கடிதம் கொடுத்தாங்க. ஆனால், கடிதம் கொடுத்த அடுத்த சில நாட்களில் ரெண்டு தரப்பிலும் ரெண்டு ரெண்டு பேர் வெட்டப்படுறாங்க. திருந்த நினைச்சாலும் அது முடியலையோன்னு சென்னை போலீஸ் இவங்களுக்காக யோசிச்சுது. இதனால் சிட்டி போலீஸ் அதிகாரியான ஷகில் அக்தர், இந்த ரெண்டு தாதாக்களையும் சேர்த்து வைக்கும் முடிவில் இறங்கினார். அவர் முன்னாடி கை குலுக்கினவங்க அப்புறம் பிரிஞ்சு, மீண்டும் மோதலை துவக்கினாங்க. மறுபடியும் ரத்தம் தெறிக்கத் துவங்குச்சு.

இதனால் போலீஸ் மீண்டும் ஸ்கெட்சை கையில் எடுத்தது. இந்தமுறை என்கவுன்டர் உறுதிங்கிற நிலை. இதனால் ரெண்டு தாதாக்களுமே பதுங்க ஆரம்பிச்சாங்க. இதில் சேரா ரொம்ப சேஃப். பெரிய கட்சி மற்றும் ஜாதி பலம் இருந்தது. தெற்கே போய் பதுங்கினான். வெள்ளை ரவி நிலைமை அப்படியில்லை. சென்னையிலேயே ஓடி ஓடி ஒளிஞ்சுட்டு இருந்தான். அவனை முடிச்சே தீருறதுன்னு கங்கணம் கட்டுச்சு போலீஸ். அந்த சவால் அவனுக்குப் பிடிச்சிருந்துச்சு தன்னை தேடுற போலீஸை வம்பிழுக்க, கமிஷனர் ஆபீஸுக்கு எதிரில் பெண் வேடத்தில் ஆட்டோவில் வந்து இறங்கி தன்னோட நண்பர்கள், தெரிந்த போலீஸ் புள்ளிகளை சந்திச்சான். வெள்ளை ரவி எதிர்த்த மாதிரி நிற்கிறான்னு போலீஸ் டீமுக்கு தகவல் தெரிஞ்சு, அவங்க துப்பாக்கியை தூக்க ஆட்டோவில் ஏறி எஸ்கேப் ஆயிட்டான்.

வெள்ளை ரவிக்கு பாதுகாப்பான கேடயமா பி.வி. காலனி இருந்துச்சு. அவன் அங்கே பதுங்கிட்டா மக்கள் அவனை காட்டியே கொடுக்க மாட்டாங்க ஆனாலும் வெள்ளை ரவி பல இடங்களை தன்னோட பதுங்கு குழியா பயன்படுத்துனான். ஒரு சம்பவத்தை ஒரு இடத்தில் பண்ணுவான், அவன் பண்ணினதுக்கு சாட்சியும் இருக்கும். ஆனால் அதே நேரத்தில் இன்னொரு இடத்தில் இருப்பதுபோல் ஆதாரம் ரெடி பண்ணுவான். சம்பவத்தை பார்த்தவர்களும் போட்டுக் கொடுக்க மாட்டார்கள். ஆனாலும், மிகப்பெரிய ஸ்கெட்ச் போட்டு அவனை கைது பண்ணி, சென்னை சிறையில் தள்ளுச்சு போலீஸ். உள்ளே போனவன் அங்கேயும் பெரிய சம்பவத்தைப் பண்ணினான்.

1997 சென்னை சிறையில் கலவரம் வெடிச்சுது. கைதியான பாக்ஸர் வடிவேலுவின் மர்ம சாவினால் வெடிச்ச கலவரம் அது. இந்த கலவரத்தில் ஜெயிலர் ஜெயக்குமாரை எரிச்சுக் கொன்னாங்க ஜெயக்குமாரை ஒருவன் குத்தூசியில் குத்தி மடக்க, அவர் மேலே பாய்ந்து பிறாண்டி அவரது கண்ணையெல்லாம் நோண்டிட்டதா போலீஸ் சொல்லுச்சு. இறுதியில் கெரசினை ஊற்றி அவர் எரிக்கப்பட்டார். அதன் பின்னணியில் இருந்தவர் வெள்ளை ரவி என்கிறது போலீஸின் ரெக்கார்டு.

இந்த கலவரத்தை அடக்க, பெரும் போலீஸ் படை ஜெயிலுக்குள் போச்சு. அடக்கும் நடவடிக்கையோடு உள்ளே ஓவர் ஆட்டம் போடும் சில கிரிமினல்களை முடிச்சுவிடும் முடிவையும் எடுத்தாங்க அதில் முக்கியமானவன் வெள்ளை ரவி. ஆனால், போலீஸ் கையில் சிக்காமல், எந்த அடியும் வாங்காமல் தப்பித்து மறைந்து இருந்தான் ரவி. அதாவது அவனை உள்ளே வைத்து கொல்லச் சொல்லி போலீஸ் டீம் ஒன்றை சேரா இன்ஃப்ளூயன்ஸ் பண்ண, அது வெள்ளை ரவிக்கு தெரிய, பாத்ரூமினுள் ஒளிந்து கொண்டான்னு பிறகு தகவல் வந்துச்சு.

இந்த வழக்கில் இருந்து வெளியே வந்தவன் கர்நாடகா பக்கம் ஒதுங்கினான். அங்கே ஒரு லவ் ஸ்டார்ட் ஆகுது. பொண்ணை தூக்கிட்டு வந்து கல்யாணம் பண்ணினான். அப்படியே கர்நாடகாவிலும் கெத்து காட்டியிட்டிருந்தான். இந்த நிலையில் 2001 சமயத்தில் சென்னையில் பல தாதாக்கள் என்கவுன்ட்டர் ஆனாங்க. ஆனால் வெள்ளை ரவி தப்பினான். அதுக்கு அதிமுகவின் மிக முக்கிய புள்ளி ஒருவரின் ஆசீர்வாதமும் காரணம்னு போலீஸ் டிபார்ட்மென்டே பேசுச்சு.

என்கவுன்டருக்கு பயந்து கர்நாடகாவுல பதுங்கி சம்பவம் பண்ணிட்டிருந்தவன் அப்புறம் மறுபடியும் தமிழ்நாடுக்குள்ளேயும் வரத் துவங்கினான். அப்ப இங்கே தி.மு.க. ஆட்சி. அ.தி.மு.க. அனுதாபி தாதாவான வெள்ளை ரவியை முழுமையாக கார்னர் பண்ணுச்சு போலீஸ். அவனை முடிச்சு விட ஒவ்வொரு நாளுமே காத்துட்டு இருந்தாங்க. இந்த சூழல்ல ஒரு கடத்தல், மிரட்டல் புகாரில் வெள்ளை ரவி சிக்குனான். அவனை தேடி போலீஸ் ஆபீஸர் ஜாங்கிட் தலைமையிலான டீம் ஓசூரில் களமிறங்கி, அவனை கார்னர் பண்ணுச்சு. ஆனாலும் கை எறி குண்டை வீசிட்டு பெங்களூரு ரூட்ல தப்பினான். அவனை சேஸ் செய்துட்டு போயி, அங்கே வெச்சு மறுபடியும் சுத்தி வளைச்சாங்க. சரண்டராகாம மறுபடியும் போலீஸை தாக்கியதாலே இவங்க சுட வெள்ளை ரவியின் கதை முடிஞ்சுது.

போலீஸ் ரெக்கார்டின் படி 13 அல்லது 14 கொலைகள் இவன் மேலே இருக்குது. இதில் ஐந்து முதல் ஏழு வரை நேரடியாக இவன் செஞ்சது. மீதி இவனது ஸ்கெட்ச் இது போக கணக்கு வழக்கில்லாத கொலை முயற்சிகள், மிரட்டல்கள், கடத்தல், கட்டப்பஞ்சாயத்துன்னு மிக முழுமையான கிரிமினலா வாழ்ந்து செத்தான் வெள்ளை ரவி" என்று முடித்தார்.

வெள்ளை ரவி, சேராவின் மோதல் கதைதான் விக்ரம், கலாபவன் மணி நடிப்பில் 'ஜெமினி எனும் படமானது. பலரை கொன்னு போட்ட வெள்ளை ரவியின் கதை சினிமாவாகி வசூலில் ஓ போட்டதுதான் கொடுமை!

(ரத்தம் தெறிக்கும்) - எஸ்.ஷக்தி.