தமிழ்நாட்டில் இன்று (செப்.6) பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்ட செய்தி குறிப்பில், சுமார் 7.6 கிமீ உயரத்தில் கடலோர தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. சுமார் 0.9 கிமீ உயரத்தில் தெற்கு தெலுங்கானா முதல் மன்னார் வளைகுடா வரை ராயலசீமா மற்றும் தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.
மிதமான மழை
இந்த நிலையில், இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
செப்.7 & செப்.8: தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னை வானிலை
சென்னையில் இன்று (செப்.6) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.