தமிழ்நாடு

இன்ஸ்டாகிராமில் பெண் மருத்துவருக்கு ஆபாச புகைப்படங்கள்.. உடன் படித்த மாணவர் கைது..

By leninakathiya
30 Aug 2024, 03:28 PM
பெண் மருத்துவருக்கு ஆபாச புகைப்படங்கள் அனுப்பி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட, தனியார் கல்லூரியில் பணியாற்றும் பயிற்சி மருத்துவர் கைது செய்யபட்டுள்ளார்.

சென்னை வடபழனி தனியார் மருத்துவமனையில் பல்லாவரத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில்  மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.

பெண் மருத்துவர் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் 2015 பேட்ஜ் எம்.பி.பி.எஸ்., படித்துள்ளார். அப்போது கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை சேர்ந்த சுரேஷ்குமார் (27) என்பவரும் ஒரே வகுப்பில் படித்துள்ளனர். படிக்கும்போது இருவரும் நண்பர்களாகவும் இருந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்புதான் பெண் மருத்துவருக்கும், வடபழனி தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இதற்கிடையில், சில தினங்களுக்கு முன்பு பெண் மருத்துவரின் கணவரின் இன்ஸ்டாகிராமுக்கு ஆபாச வார்த்தைகளுடன் கூடிய குறுந்தகவல்கள் மற்றும் நிர்வாண படம் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் மருத்துவரின் கணவர் அந்த ஐடியை பிளாக் செய்துள்ளார்.

இதையடுத்து அந்த நபர் வாட்ஸ்அப் எண்ணிற்கு பெண் மருத்துவர் மற்றும் அவரது கணவர் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை அனுப்பியதுடன், அவதூறான வார்த்தைகளை பேசி ஆடியோவும் அனுப்பியுள்ளார். அந்த ஆடியோவில் பெண் மருத்துவர் பற்றி தவறாக பேசி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதேபோல் பெண் மருத்துவரின் எண்ணுக்கும் அந்த நபர் ஆபாச படங்களை அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக பெண் மருத்துவரின் கணவர் பல்லாவரம் காவல் நிலைய போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் தீவிர விசாரணை நடத்தியதில் பெண் மருத்துவருடன் ஒன்றாக படித்த நபர்தான், இந்த சதி வேலையில் ஈடுபட்டது தெரியவந்தது.

அதன் பேரில் திருவள்ளூர் தனியார் மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் கடலூரை சேர்ந்த மருத்துவர் சுரேஷ்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பெண் மருத்துவரை மிரட்டியதும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும் உறுதியானது. இதனையடுத்து பல்லாவரம் காவல் நிலைய போலீசார் சுரேஷ் குமாரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

சமூக வலைதளங்களில் பெண்களுக்கு பாலியல் சீண்டல் என்னும் வன்கொடுமை விவகாரங்கள் தினம், தினம் மர்ம நபர்களால் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனால், பெண்கள் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் காவல் துறையினர் விழிப்புணர்வு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.