தமிழ்நாடு

பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

By Christon
08 Jul 2025, 04:24 PM
கடலூர் அருகே ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
கடலூர் அருகே செம்மங்குப்பத்தில், இன்று காலை பள்ளி வேன் மீது பயணிகள் ரயில் மோதிய கோர விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்தில் சில மாணவர்கள் படுகாயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ரயில்வே கேட் கீப்பரின் கவனக்குறைவு விபத்துக்குக் காரணம் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ரயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “கடலூர் செம்மங்குப்பதில் நடந்த விபத்தில், இரண்டு இளம் மாணவர்களின் உயிர்கள் பறிபோன துயரச் செய்தியால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

உயிரிழந்த மாணவச் செல்வங்களான நிவாஸ் மற்றும் சாருமதி ஆகியோரது பெற்றோருக்கும் - உறவினர்களுக்கும் - நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்விபத்தில் காயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மூவருக்கும் உயர்தர சிகிச்சை அளித்திட அறிவுறுத்தியுள்ளதோடு, அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோரை நேரில் சென்று உதவிடவும் அறிவுறுத்தியுள்ளேன்.

இந்த விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து தலா ஐந்து லட்ச ரூபாய் வழங்கிடவும் - பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் தலா ஒரு லட்ச ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.