தமிழ்நாடு

TN Weather: சென்னை, திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

By Christon
27 Jun 2026, 07:09 AM
தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் இன்று (ஜூன் 27) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், கடலோர ஆந்திரப்பிரதேசத்திலிருந்து மத்திய மகாராஷ்டிரா வரை தெலுங்கானா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள், மராத்வாடா பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியின் வழியாக சுமார் 3.1 கிமீ முதல் 4.5 உயரத்தில் ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.

கனமழை எச்சரிக்கை

இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.

நாளை (ஜூன் 28) விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.

சென்னை வானிலை

சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான/கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.