தமிழ்நாடு

ரீல்ஸ் வீடியோவால் ஏற்பட்ட தகராறு.. SSI-ஐ அடித்துக் கொன்ற போதை கும்பல்.. தேனியில் பரபரப்பு!

By Christon
09 Nov 2026, 08:27 AM
தேனியில் பட்டாசு வெட்டி ரீல்ஸ் எடுத்த போதை கும்பலைத் தட்டிக்கேட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில் குமார் தாக்கப்பட்டதில் உயிரிழந்தார்;

தேனி சமதர்மபுரம் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாகப் பட்டாசு வெடித்து ரீல்ஸ் எடுத்த போதை கும்பலைத் தட்டிக்கேட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் (SSI) செந்தில் குமார் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரீல்ஸ் மோகத்தால் எழுந்த மோதல்

சமதர்மபுரம் பகுதியில் நேற்று இரவு சிலர் போதையில் சாலையை மறித்துப் பட்டாசுகளை வெடித்துச் சமூக வலைத்தளங்களுக்காக ரீல்ஸ் எடுத்துக்கொண்டிருந்தனர். இதனால் அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். அப்போது அவ்வழியாக வந்த எஸ்.எஸ்.ஐ. செந்தில் குமார், பொதுமக்களுக்கு இடையூறு செய்யாதவாறு பட்டாசு வெடிக்குமாறு அறிவுறுத்தினார். ஆனால், அதைக் கேட்காமல் அந்த கும்பல் தொடர்ந்து இடையூறு செய்ததால், எச்சரிக்கும் விதமாக அவர்களைத் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்தார்.

எஸ்.எஸ்.ஐ மீது கொடூரத் தாக்குதல்

தங்களைப் படம் பிடித்ததால் ஆத்திரமடைந்த அந்த போதை கும்பல், எஸ்.எஸ்.ஐ. செந்தில் குமாரைச் சூழ்ந்துகொண்டு கடுமையாகத் தாக்கியது. இத்தாக்குதலில் நிலைகுலைந்து படுகாயமடைந்த அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். எனினும், அவர் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

3 பேர் கைது - தீவிர விசாரணை

காவல் அதிகாரி உயிரிழந்ததைத் தொடர்ந்து, அசம்பாவிதங்களைத் தவிர்க்க இரவோடு இரவாக அப்பகுதியில் பெருமளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தேனி மாவட்ட எஸ்பி பிரவீன் கவுதம் சம்பவ இடத்திற்கு நேரடியாக வந்து ஆய்வு நடத்தினார். அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளைப் பறிமுதல் செய்த காவல்துறையினர், முதற்கட்ட விசாரணையில் தாக்குதலில் ஈடுபட்ட 3 பேரைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.