தமிழ்நாடு

தென்மேற்கு பருவமழை: இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்!

By Christon
13 May 2026, 04:50 PM
தென்மேற்கு பருவமழை வருகிற 16-ஆம் தேதி வாக்கில் தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை வருகிற 16-ஆம் தேதி வாக்கில் தொடங்க வாய்ப்புள்ளதாகவும் தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், தென்மேற்கு பருவமழை தெற்கு வங்கக்கடலின் சில பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள், அந்தமான் மற்றும் நிகோபார் தீவு பகுதிகளில் 16 ஆம் தேதி வாக்கில் துவங்கக்கூடும்.

நேற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வடக்கு திசையில் நகர்ந்து, இன்று காலை 08:30 மணி அளவில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது.

இதன்காரணமாக, நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் லேசான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.

நாளை மறுநாள் (மே.15) தென் தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். மே.16 மற்றும் 17 அன்று தேனி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

அதேபோல் மே மற்றும் 19 அன்று நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.