தமிழ்நாடு

RATHAVETTAI EPISODE 12 : ரவுடியிசம், அரசியல், பழிவாங்கல்! ஆற்காடு சுரேஷின் முழு கிரிமினல் கதை!

By Santhosh
28 Oct 2026, 08:15 PM
ரத்தவேட்டை பாகம் 12 : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் பின்னணியில் பேசப்பட்ட பழிவாங்கல் கோணம், ஆற்காடு சுரேஷின் குற்றப் பயணம், சென்னையின் ரவுடியிச உலகில் உருவான பகைகள் எனப் பல அதிர்ச்சிகரமான சம்பவங்களை விவரிக்கிறது.

ஆல் பார்ட்டி கூட்டம் தெரியும். ஆனால், 'ஆல் பார்ட்டி மர்டர்' தெரியுமா? அதுதான் ஆம்ஸ்ட்ராங் கொலை. ஒரு நபரின் கொலையில் ரூலிங் பார்ட்டி முதல் லெட்டர்பேடு கட்சி வரை சகல கட்சிகளைச் சேர்ந்த சிலர் சகட்டுமேனிக்கு சம்பந்தப்பட்டுள்ளனர் என்றால் அது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில்தான். தமிழகத்தையே உலுக்கி, வட இந்தியாவே திரும்பிப் பார்க்குமளவுக்கு ஓர் அரசியல் பெரும்புள்ளி சிதைக்கப்பட்ட மிக சமீப கால சம்பவம் இதுதான்!

இந்தக் கொலையில் எடுத்த எடுப்பிலேயே சொல்லப்பட்ட மிக முக்கிய காரணம், 'தாதா ஆற்காடு சுரேஷ் கொலைக்கான பழிவாங்கல் என்பதுதான். இந்தக் காரணம் பின்னாட்களில் மறுக்கப்படுகிறது. ஏற்கப்படுகிறது என்பதெல்லாம் வேறு கதை ஆனால், தேசிய அளவில் தடம் பதித்த ஒரு கட்சியின் தமிழக தலைவரை பழிக்குப் பழியாக கொல்லுமளவுக்கு ஒரு தாதாவின் விழுதுகள் தலையெடுத்துள்ளன என்றால், அந்த நபர் எவ்வளவு பெரிய ஆட்டக்காரன் என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயமே.

ஆற்காடு சுரேஷின் குற்றசரித்திரத்தை நம்மிடம் விரிவாக விளக்கினார் சென்னையின் ஒரு வழக்கறிஞர். "சுரேஷ் இன்னைக்கு உயிரோட இருந்திருந்தான்னா, அவனுக்கு அதிகபட்சம் 45 வயசு இருந்திருக்கும். என்னோட கேஸ் கட்டு ரெக்கார்டின்படி அவன் 1978ல் வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் பிறந்திருக்கான். பத்தாவதுக்கு மேல படிப்பு ஏறலை. ஆரம்பத்துல சமையல் வேலைக்குப் போயிருக்கான். போன இடத்துல சேர்க்கை சரியில்லை.

அவனுக்கு ஏதாச்சும் உருப்படியா வேலை வாங்கலாம்னு பெத்தவங்க முயற்சி பண்ணியிருக்காங்க. இந்த நிலையில சென்னை தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக கிடங்கில் காவலர் வேலை கிடைச்சிருக்குது. இந்த வேலை கிடைச்ச பிறகு சென்னை புளியந்தோப்புக்கு சுரேஷ் குடும்பம் இடம் மாறியிருக்குது. நல்ல புத்தி உள்ளவன் இப்படியொரு வேலை மூலமா வாழ்க்கையில செட்டிலாக நினைப்பான். ஆனா, அவனுக்கோ தாதாவாகணும்னு நினைப்பு. வந்த சம்பளத்துல கந்து வட்டிக்கு கொடுக்க ஆரம்பிச்சிருக்கான்.

அதுல கிடைச்ச பணத்தோட திருப்தியடையாதவன், புளியந்தோப்பு உள்ளிட்ட சுத்துவட்டார ஏரியாக்கள்ல கட்டப் பஞ் சாயத்துக்களை பண்ணான். தாதாக்களுக்கு கைக்கூலியாவும் மாறினான். அடுத்த ஸ்டெப்ல ஆயுதங்களைத் தூக்கிட்டான்.

1998ல் ஆட்கடத்தல் வழக்கு ஒண்ணு சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் இவன் மேலே பதிவானது. இதுல ஜெயிலுக்குள்ளே போனவனின் தலையெழுத்து தலைகீழா மாறிடுச்சு. ஜெயிலுக்குள்ளே ரவுடிகளின் நட்பு கிடைச்சிருக்குது. அதை வெச்சுகிட்டு வெளியே வந்து முழுமையா பாதை மாறினான். ஆந்திரா லிங்க் பிடிச்சு செம்மரக் கடத்தல்ல இறங்கினான்.

2002ல் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் ஒரு கொலையில் சிக்கினான். அந்தக் கொலை வழக்கில் கைதாகி பிறகு தமிழ்நாட்டுக்கு வந்ததும் 'ஆற்காடு சுரேஷ்'ன்னு தன்னை விளம்பரப்படுத்திக்க ஆரம்பிச்சான். ஏற்கெனவே சில ரவுடிங்க சுரேஷ்ங்கிற பெயர்ல இருந்ததால, ஈஸியா அடையாளம் கண்டுக்க இவனை 'ஆற்காடு சுரேஷ்ன்னு போலீஸும் வட்டம் போட்டுவிட, இதுக்குப் பிறகு பரபரப்பான கொலைகாரனா மாறினான் ஆற்காடு சுரேஷ்.

2005ல் சைதாப்பேட்டையில் வெங்கடேஷ்னு ஒருத்தரை பப்ளிக் முன்னிலையில் போட்டுத்தள்ளிட்டு, ரத்தம் வழியும் வாளை செத்தா காட்டிட்டுப் போனான். இது வடசென்னை, தென் சென்னைன்னு ஆல் ஏரியா ரவுடிகளை ஆற்காடு சுரேஷை நோக்கித் திருப்புச்சு. இந்த கொலைக்குப் பிறகு சில மாசங்களிலேயே காஞ் சிபுரத்தில் ஒரு கொலை, அடுத்து சென்னையில் இரண்டு கொலைகளை டீமோடு சேர்ந்து பண்ணினான். இந்த வழக்குகள்ல உள்ளே போனப்பதான் பெரிய அளவுல கஞ்சா விற்கும் டீமோடு தொடர்பாகுது. வெளியில வந்து அந்த பிஸினஸ்லேயும் இறங்கினவன் வாழ்க்கையில வந்து சேர்ந்தா அஞ்சலை.

சின்ன வயசுலேயே ஆந்திராவுல இருந்து சென்னைக்கு ஷிஃப்ட் ஆகிவந்த அஞ்சலை குடும்பம், புளியந்தோப்பு ஆடு தொட்டி ஏரியாவுல கழிவுகளை சுத்தம் பண்ணுற வேலையில இருந்திருக்காங்க. அங்கே வேலை பார்த்து வளர ஆரம்பிச்ச அஞ்சலை, வட்டிக்கு பணம் கொடுக்க ஆரம்பிச்சிருக்காங்க. அவங்ககூட ஒட்டிக்கிட்டான் சுரேஷ். இது ஒருகட்டத்துல காதல், தொடர்புன்னு ஆகி வேற லெவலுக்கு போயிடுச்சு. தன் கணவனை விட்டுட்டு சுரேஷே கதின்னு ஆகியிருக்கா அஞ்சல. இந்த இடத்துலதான் ஒரு பிரச்னை முளைச்சுது. அஞ்சலயோட புருஷன் டென்ஷனாயிட்டாரா?ன்னு கேக்காதீங்க. டென்ஷனானது வேற ஆள்.

அதாவது, அஞ்சல கூட ஏற்கெனவே நட்பா இருந்தான் சென்னையின் இன்னொரு மிக முக்கிய ரவுடியான சென்னகேசவலு என்கிற சின்னா. அவனுக்கு சுரேஷ், அஞ்சல காதல் பிடிக்கல. அதனால 'நியெல்லாம் ஒரு ரவுடியாடா? வாளெடுத்து வீரமா போடுறவன் எப்படிடா அடுத்தவன் பொண்டாட்டிகூட இருப்பான்? வெட்கமா இல்லையா'ன்னு கேவலமா பேசி பிரிச்சுவிட பார்த்திருக்கான். ஆனா, வேலைக்கு ஆகல. அஞ்சலைக்கு போட்டி அதிகமானதால, அசந்தால் ஆபத்துன்னு, லயிச்சுப் போயி அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டான் சுரேஷ். இதுல சின்னாவுக்கு கடும் எரிச்சல் இருந்தாலும் சுரேஷ் கூட ஒரு மாதிரி நட்பை மெயின்டெயின் பண்ணினவனால ஒருகட்டத்துல தன் கோபத்தை மறைக்க முடியலை.

இந்த கோபம் அவங்களுக்கு இடையிலான வட்டித் தொழில், டெண்டர், ரவுடியிஸ அசைன்மெண்ட்ஸ்ன்னு எல்லாத்துலேயும் வெடிச்சிருக்குது. ரெண்டு பேருக்கும் இடையில மோதல் ரொம்பவே முத்திட, அஞ்சலையால சமாதானமே பண்ணி வைக்க முடியலை. சின்னாவை சிதைக்க முடிவு பண்ணிட்டான் சுரேஷ் விளைவு. 2010ல் பூந்தமல்லி கோர்ட்டுக்கு பக்கத்துல, பட்டப்பகல்ல சின்னாவை அவனோட வக்கீலோடு சேர்த்து மிக குரூரமா கொலை பண்ணுச்சு ஆற்காடு சுரேஷ் டீம்.

அதுக்கு அப்புறம் சின்னாவின் கணக்குப் பிள்ளையான முதியவர் ராமகிருஷ்ணன் கொலைக்கும் ஆற்காடு சுரேஷே காரணம்னு போலீஸ் சொல்லுச்சு. இதன் பிறகு இன்னொரு ரவுடியான நாயுடுவை கொன்னான் ஆற்காடு சுரேஷ். சின்னா கொலை உள்ளிட்டவற்றில் ரவுடி சீசிங் ராஜாவும் சுரேஷுக்கு வலது கரமா இருந்ததால அந்த டீம் யாருக்கும் அடங்காமல் வெறிகொண்டு ஆடுச்சு. இந்த நிலையில்தான் பாம் சரவணன், ஆம்ஸ்ட்ராங், தென்னரசு இவங்களெல்லாம் ஆற்காடு சுரேஷ-க்கு எதிரியானாங்க. இதனால் தென்னரசுவை 2015ல் அவன் வீட்டம்மா முன்னாடியே போட்டுப் பொளந்து கொன்னுட்டான் ஆற்காடு சுரேஷ். இந்தக் கொலை மூலம் மிகப்பெரிய பகையை சம்பாதிச்சுட்டான். இதுக்குப் பிறகு ஆந்திரா, திருவள்ளூர்னு பதுங்கியிருந்தான். அங்கே இருந்துட்டே சென்னைக்குள்ள தன்னோட சேட்டைகளை பண்ணிட்டிருந்தான்.

சென்னைக்குள்ளே கால் வெச்சா. அவனை தூக்குறதுக்கு போலீஸும், பழைய பகைல போட்டுத் தள்ளுறதுக்கு எதிரிகளும் காத்திருந்தாங்க. 2021ல் சுரேஷ் புளியந்தோப்புக்கு ஒரு விஷயமா வந்தவனை எதிரிகளைத் தாண்டி போலீஸ் ரவுண்டு கட்டுச்சு.

ஜெயிலுக்குப் போயிட்டு வெளியில வந்தவன் கொஞ்சம் கொலைகளை ஒத்தி வெச்சுட்டு, பணத்தேவைக்காக கட்டப்பஞ்சாயத்து மிரட்டல்னு மட்டும் இறங்குனான். குறிப்பா, ஒரு கோல்டு மோசடி நிறுவனத்தின் விவகாரத்தில் தலையிட்டு அதை வெச்சு பணம் பார்த்திருக்கான். ஆனால். இதே விவகாரத்தில் ஆம்ஸ்ட்ராங்கும் அவர் டீமும் எதிர்தரப்புக்கு ஆதரவா நின்றிருக்காங்க. இதுல உருவான கோபமும் பழைய தென்னரசு கொலை கோபமும் ஒண்ணுசேர மீண்டும் முட்டல், மோதல் உருவாகுது.

2023 ஆகஸ்ட் 18ம் தேதி எக்மோர் கோர்ட்ல ஒரு வழக்குல ஆஜராகிட்டு வெளியில வந்தவனை அவனுக்கே தெரியாம ஒரு டீம் ஃபாலோ பண்ணுச்சு. நேரா பட்டினப்பாக்கம் போன சுரேஷ், அங்கே தன் நண்பன் மாது கூட சேர்ந்து சரக்கடிச்சுட்டு, மீன் சாப்பாடு சாப்பிட்டான். அவனும், அவன் டீமும் அசந்து பேசிட்டிருந்த நொடிகள்ல ரவுண்டு கட்டுச்சு பகைவர் படை ஆயுதங்களை சரமாரியா சுரேஷோட உடம்புல இறக்கினாங்க. எத்தனையோ பேரை அவங்களுக்கே தெரியாம ஸ்கெட்ச் போட்டு, சுத்துப் போட்டு, வெட்டி சாய்ச்சிருக்கான் சுரேஷ் ஆனால் தன்னை ஒரு டீம் போடுறப்ப, என்ன நடக்குதுன்னு புரிஞ்சு சுதாரிக்கிறதுக்குள்ள வீசித்தள்ளிட்டானுங்க.

ஆம்ஸ்ட்ராங்கும் இன்னும் சிலரும்தான் ஆற்காடு சுரேஷை திட்டம் போட்டு கொன்னுட்டாங்கன்னு அவன் மனைவி பொற்கொடி, தம்பி பாலு, இரண்டாவது மனைவி அஞ்சலைன்னு அத்தனை பேருமே நம்புனதா சொல்லும் போலீஸ், அதுக்கு பழிக்குப் பழியாதான் ஆம்ஸ்ட்ராங்கை திட்டம் போட்டு கொன்னாங்கன்னு சொல்லுது.

ஆக்சுவலா ஆற்காடு சுரேஷ் கொலையில் ஆம்ஸ்ட்ராங் கை இருக்குதா இல்லையான்னு எனக்குத் தெரியலை. ஆனால் சுரேஷ் கையில் பல வருஷமா வழிஞ்சிட்டிருந்த பல பேரோட ரத்தத்தைக் கழுவ பட்டினப்பாக்கம் கடலே பத்தாது. அவனோட கர்மா அவன் கதையை முடிச்சதுங்கிறது நிதர்சனம்" என்றபடி ஃபைலை மூடினார்.

கர்மா இஸ் எ பூமராங்!

(ரத்தம் தெறிக்கும்) - எஸ். ஷக்தி.