ஆனால் இந்த வழித்தடத்தில் பயணிக்கப் போகிறவர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள் இருக்கின்றன. அது என்னென்ன தெரியுமா?
14.64 கி.மீ... 40 நிமிட பயணம்!
பூந்தமல்லி முதல் வடபழனி வரை அமைக்கப்பட்டுள்ள இந்த மெட்ரோ வழித்தடத்தின் மொத்த நீளம் 14.64 கி.மீ. இந்த வழித்தடத்தில் மொத்தம் 11 மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளன. முழுப் பாதையையும் கடக்க சுமார் 40 நிமிடங்கள் ஆகும். ரயிலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 80 கி.மீ. வரை இருக்கும். ஆனால் இங்கேதான் ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது.
7 நிலையங்கள்... இப்போதைக்கு ரயில் நிற்காது!
பூந்தமல்லியில் இருந்து வடபழனி நோக்கி செல்லும் ரயிலில் தற்போது அனைத்து நிலையங்களிலும் இறங்கி ஏற முடியாது. போரூர் சந்திப்பு - வடபழனி இடையே உள்ள 7 நிலையங்களில் ரயில் இப்போதைக்கு நிற்காது.
சாலிகிராமம், ஆழ்வார் திருநகர், வளசரவாக்கம், காரம்பாக்கம், ஆலப்பாக்கம் உள்ளிட்ட இந்தப் பகுதிகளுக்கான நிலையங்கள் பின்னர் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால் தற்போதைய இயக்கத்தில், பூந்தமல்லியில் புறப்படும் ரயில் போரூர் சந்திப்பு வரை வந்து, அதன் பிறகு இடையில் நிற்காமல் நேராக வடபழனியை சென்றடையும். இந்த இடைப்பட்ட காலத்தில் பயணிகள் இதை மனதில் வைத்துக்கொள்வது அவசியம்.
வடபழனியில் இறங்கினால்... அடுத்து எங்கே வேண்டுமானாலும் போகலாம்!
இந்த புதிய வழித்தடத்தின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட்களில் ஒன்று இணைப்பு வசதி. வடபழனி மெட்ரோ நிலையத்தில் ஏற்கெனவே இயங்கிவரும் மெட்ரோ வழித்தடத்துடன் இணையும் வசதி இருப்பதால், அங்கிருந்து வழித்தடத்தை மாற்றி சென்னையின் பல முக்கிய பகுதிகளுக்கு பயணிக்க முடியும்.
அதாவது வடபழனியில் இருந்து மெட்ரோவை மாற்றி எழும்பூர், சென்னை சென்ட்ரல், ஆலந்தூர், சென்னை விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். இதனால் பூந்தமல்லி மற்றும் மேற்கு சென்னை பகுதிகளில் இருந்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கு செல்வது இன்னும் எளிதாகும்.
10 நிமிடத்துக்கு ஒரு ரயில்!
இந்த வழித்தடத்துக்காக மொத்தம் 36 மெட்ரோ ரயில்கள் உள்ளன. தொடக்க கட்டமாக அவற்றில் 10 ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் சுமார் 10 நிமிடங்களுக்கு ஒரு முறை ரயில் இயக்கப்படும். தற்போது இயக்கப்படும் ரயில்கள் 3 பெட்டிகளைக் கொண்டிருந்தாலும், தேவைக்கேற்ப அவற்றை 6 பெட்டிகளாக இயக்கும் வசதியும் உள்ளது. அதாவது பயணிகள் கூட்டம் அதிகரிக்கும்போது சேவையை விரிவுபடுத்தும் வாய்ப்பும் இருக்கிறது.
டிக்கெட் கட்டணம் எவ்வளவு?
பூந்தமல்லியில் இருந்து பயணம் செய்யும் பயணிகளுக்கு கட்டணம், செல்லும் இடத்தைப் பொறுத்து மாறுபடும்.
பூந்தமல்லி புறவழிச்சாலை - ரூ.10
பூந்தமல்லி அரசு மருத்துவமனை, கரையான்சாவடி, குமணன்சாவடி, காட்டுப்பாக்கம் - ரூ.20
ஐயப்பன்தாங்கல், தெள்ளியகரம், போரூர் மூலைக்கடை, போரூர் சந்திப்பு - ரூ.30
பூந்தமல்லி முதல் வடபழனி வரை - அதிகபட்சம் ரூ.40
அதாவது, பூந்தமல்லியில் இருந்து வடபழனி வரை ரூ.40-க்குள் பயணம் செய்யலாம்.
ரயிலில் டிரைவர் இல்லையா?
இந்த வழித்தடத்தின் மற்றொரு முக்கிய சிறப்பு இதுதான். ஆளில்லா ரயில் இயக்கத்துக்கான தொழில்நுட்ப வசதிகள் இந்த மெட்ரோ அமைப்பில் இடம்பெற்றுள்ளன. அதோடு,தானியங்கி ரயில் கட்டுப்பாட்டு அமைப்பு, தானியங்கி பாதுகாப்பு அமைப்பு, தகவல் தொடர்பு அடிப்படையிலான ரயில் கட்டுப்பாடு, பயணிகள் பாதுகாப்புக்கான கதவுகள் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
பிளாட்பார்ம் மற்றும் ரயில் பாதைக்கு இடையே பயணிகள் தவறி விழுவதைத் தடுக்கும் வகையில் 5.5 அடி உயர பாதுகாப்புத் தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் பயணிகளின் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
இன்னொரு முக்கிய சிறப்பு... இரட்டை அடுக்கு மெட்ரோ!
இந்தத் திட்டத்தில் குறிப்பிடத்தக்க அம்சமாக இரட்டை அடுக்கு மெட்ரோ பகுதியும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 4 மற்றும் 5-ம் வழித்தடங்களுக்கு இடையே ரயில் மாறுவதற்கான வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் எதிர்காலத்தில் சென்னை மெட்ரோவின் வெவ்வேறு வழித்தடங்களை இணைத்து பயணிப்பது இன்னும் சுலபமாகும்.
ஸ்ரீபெரும்புதூர் செல்லும் மக்களுக்கும் பெரிய உதவி!
சென்னை - ஸ்ரீபெரும்புதூர் தொழில்துறை வழித்தடத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் தினமும் ஏராளமான தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயணம் செய்கிறார்கள்.
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை அவர்களின் நகரப் பயணத்தை எளிதாக்குவதுடன், தொழில்துறை பகுதிகளுக்குச் செல்லும் போக்குவரத்து இணைப்புக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
கார், பஸ் என சாலையில் பல மணி நேரம் சிக்கித் தவிக்கும் பயணிகளுக்கு, இந்த மெட்ரோ சேவை நேரத்தை மிச்சப்படுத்தும் புதிய வழியாக மாறுமா என்பதுதான் இனி பார்க்க வேண்டிய விஷயம்.
முக்கியமாக, ரூ.40க்குள் வடபழனியை அடையலாம் என்பதும், வடபழனியில் இருந்து மற்ற மெட்ரோ வழித்தடங்களுக்கு மாறிக்கொள்ள முடியும் என்பதும் மேற்கு சென்னை மக்களுக்கு மிகப்பெரிய பிளஸ்.
அதனால், பூந்தமல்லி - போரூர் - வடபழனி வழித்தடத்தை தினமும் பயன்படுத்தப் போகிறீர்கள் என்றால், ரயில் நிற்கும் நிலையங்கள், கட்டணம், இணைப்பு வழித்தடங்கள் ஆகியவற்றை இப்போதே தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.