தமிழகச் சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதங்களின் இடையே, முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டுத் தேமுதிக, திமுக உறுப்பினர்களிடையே நிகழ்ந்த சுவாரசியமான உரையாடல் அவையில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
தண்ணீர் பாட்டில்கள் வேண்டும்- பிரேமலதா
சட்டப்பேரவையில் தேமுதிக எம்.எல்.ஏ பிரேமலதா விஜயகாந்த் பேசும்போது, முதலமைச்சர் விஜய்க்குத் தனது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார். தொடர்ந்து அவர் ஒரு கோரிக்கையை முன்வைத்து, "பேரவையில் உறுப்பினர்களுக்கு டம்ளரில் தண்ணீர் கொடுக்கும் முறை மிகவும் பழைய மாடலாக உள்ளது. ஊழியர்கள் ஒவ்வொரு வரிசையாக வந்து கொடுத்துக் கொண்டே இருப்பது அவர்களுக்குக் கடினமாக இருக்கிறது. எனவே, பிளாஸ்டிக் இல்லாமல் ஒவ்வொரு உறுப்பினருக்கும் தனித்தனி கண்ணாடி பாட்டில்களில் தண்ணீர் வழங்க வேண்டும்" என்றார்.
ஓபிஎஸ் கலகல
பிரேமலதாவின் இந்தக் கோரிக்கைக்கு உடனே எழுந்து பதிலளித்த திமுக எம்.எல்.ஏ ஓ. பன்னீர்செல்வம், "இது ஒரு நல்ல கருத்துதான், ஆனால் தற்போதைய சூழலில் ஏற்புடையதல்ல. ஏனென்றால், அவையில் யாருக்காவது கோபம் வந்தால் தண்ணீர் பாட்டில்களை எடுத்து எறிவதற்கு வாய்ப்பிருக்கிறது" என்று குறிப்பிட்டார். இதனால் அவையில் திடீரெனப் பெரும் சிரிப்பலை ஏற்பட்டது. அதற்குப் பதிலளித்த பிரேமலதா, "தண்ணீர் பாட்டில்தான் என்றில்லை, கோபம் வந்தால் டம்ளரைக் கூட வீசலாம்" என்று நகைச்சுவையாகக் கூறினார்.
சொந்த அனுபவமா? - தங்கம் தென்னரசு கிண்டல்
இதற்கிடையே குறுக்கிட்டுப் பேசிய தங்கம் தென்னரசு, "ஓபிஎஸ் அவர்கள் தனது சொந்த அனுபவத்தை வைத்துத்தான் அப்படிச் சொல்கிறாரா என்பதை அறிய விரும்புகிறேன்" என்று மறைமுகமாகக் கிண்டல் அடித்தார். கடந்த காலங்களில் அதிமுக பொதுக்குழுவின் போது ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில்கள் வீசப்பட்ட சம்பவத்தை அவர் சுட்டிக்காட்டினார். இதனால் அவையில் சிரிப்பு மேலும் அதிகரித்தது.
தொடர்ந்து பேசிய பிரேமலதா, "காலையிலிருந்து காரசாரமான விவாதங்கள் போய்க்கொண்டிருந்தன; முதல்வர் பிறந்தநாளில் அவையைச் சற்று சந்தோஷமாக வைத்திருக்கவே இதைப் பேசினேன்" என்று கூறினார்.