தமிழ்நாடு

பெரம்பூரில் எம்.எல்.ஏ. அலுவலகம் திறப்பு: முதல்வராக விஜய் பங்கேற்ற முதல் தொகுதி நிகழ்வு!

By Christon
13 Jul 2026, 04:39 PM
பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை முதல்வர் விஜய் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சரும் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினருமான விஜய், தனது சொந்த தொகுதியில் புதிய எம்.எல்.ஏ. அலுவலகம் மற்றும் இ-சேவை மையத்தைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைத்தார்.

பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரான விஜய், முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு தனது சொந்த தொகுதியில் பங்கேற்ற முதல் நிகழ்வு இதுவாகும். பெரம்பூரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள எம்.எல்.ஏ. அலுவலகத்தை இன்று நேரில் திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், அங்கிருந்த கொள்கைத் தலைவர்களின் உருவப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், அலுவலகத்தில் உள்ள வசதிகளைப் பார்வையிட்டு, அவருக்கென ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்து அதன் செயல்பாடுகள் குறித்து அரசு அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பொதுமக்களின் வசதிக்காக இந்த புதிய அலுவலக வளாகத்திலேயே அமைக்கப்பட்டுள்ள அரசு இ-சேவை மையத்தையும் முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் செங்கோட்டையன், முதலமைச்சருக்கு மலர்க்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தார்.

அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்தத் திறப்பு விழா குறித்து அரசு வட்டாரங்கள் கூறுகையில், பெரம்பூர் தொகுதி மக்களுக்குத் தேவையான சான்றிதழ்கள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் விரைவாகவும் எளிமையாகவும் கிடைக்க இந்த புதிய அலுவலகமும் இ-சேவை மையமும் முக்கியப் பங்காற்றும் எனத் தெரிவித்துள்ளன.