தமிழ்நாடு

அமைச்சர் சரத்குமார் மீது அதிரடி புகார்... காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு !

By Sumalekha
29 Jun 2026, 02:57 PM
தமிழக மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியுமான சரத்குமார் தொடர்பாக புதிய சட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் மீது விசாரணை நடத்தக் கோரி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர் சரண்யா நடராஜன் புகார் மனு அளித்துள்ளார்.
சமீபத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின்போது, விஐபி கேலரியில் அமர்ந்திருந்த அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத்தியதாக சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலானது. இந்த வீடியோ அரசியல் வட்டாரங்களிலும் சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், தேவையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வழக்கறிஞர் சரண்யா நடராஜன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

மேலும், சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படும் சேப்பாக்கம் மைதான எல்லைக்குட்பட்ட திருவல்லிக்கேணி காவல் நிலையத்திலும் இதுதொடர்பாக தனியாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவில், போதைப்பொருள் தடுப்புச் சட்டம் (NDPS Act) தொடர்புடைய அம்சங்கள் உள்ளதா என்பதை விசாரித்து, தேவையானால் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இதற்கு முன்பே, சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ குறித்து அமைச்சர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா இணைந்து விளக்கம் அளித்திருந்தனர். அதில், ஐபிஎல் போட்டியின் போது தங்களது குழந்தைக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரையை குழந்தையால் விழுங்க முடியாததால் அதைத் தூளாக்கிக் கொடுத்ததாகவும் தெரிவித்தனர். அந்தக் காட்சியை தவறாகச் சித்தரித்து போதைப்பொருள் பயன்படுத்தியதாக வதந்தி பரப்பப்படுவதாகவும் அவர்கள் கூறியிருந்தனர்.

இந்நிலையில், தற்போது வழக்கறிஞர் அளித்துள்ள புகார் மனுவால் இந்த விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும், இதுவரை அமைச்சர் சரத்குமார் மீது எந்தவித வழக்குப்பதிவும் செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை; புகார் தொடர்பாக காவல்துறை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அடுத்தகட்டத்தில் என்னவாக இருக்கும் என்பது கவனிக்கப்படுகிறது.