மதுரை பைபாஸ் சாலையில் உள்ள பிரபல தனிஷ்க் நகைக்கடையில் நடைபெற்ற பல கோடி ரூபாய் மதிப்பிலான கொள்ளைச் சம்பவத்தின் பின்னணி மற்றும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட விவரங்களை மதுரை மாநகரக் காவல் ஆணையர் எஸ்.ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் வெளியிட்டுள்ளார்.
அவர் கூறியதாவது, "கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த தனிஷ்க் நகைக்கடையின் பின்புற சாரம் மற்றும் லிஃப்ட் தடம் வழியாக உள்ளே புகுந்த 22 வயதான நிஷாந்த், எந்தவொரு கண்ணாடிப் பெட்டியையும் உடைக்காமல் சாதுரியமாக 10.3 கிலோ தங்கம் மற்றும் 1 கிலோ வைர நகைகளைக் கொள்ளையடித்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்த 9 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, முகமூடி அணிந்திருந்த கொள்ளையனின் கையில் இருந்த பச்சை குத்தப்பட்ட அடையாளம் மற்றும் தொப்பி மூலம் அவன் பழங்காநத்தத்தைச் சேர்ந்த நிஷாந்த் என்பது உறுதி செய்யப்பட்டது.
தனது காதலியான இன்ஸ்டாகிராம் பிரபலம் மீனாட்சியின் பணத் தேவைகளுக்காகவும், ஆடம்பர வாழ்க்கைக்காகவும் நிஷாந்த் இந்தக் கொள்ளையை அரங்கேற்றியது விசாரணையில் தெரியவந்துள்ளது. கொள்ளையடித்ததில் 5.5 கிலோ நகைகளை மீனாட்சியிடம் கொடுத்திருந்த நிலையில், மொபைல் சிக்னல் மூலம் மீனாட்சி மற்றும் கொள்ளைக்கு உடந்தையாக இருந்த நிஷாந்தின் தந்தை சுரேஷ் ஆகியோரைக் கைது செய்த போலீசார் அந்த நகைகளை மீட்டனர்.
இதற்கிடையே, ஆம்னி பேருந்து மூலம் தப்பியோட முயன்ற நிஷாந்தின் நடமாட்டத்தில் சந்தேகமடைந்த பேருந்து ஓட்டுநர் அளித்த தகவலின் பேரில், தர்மபுரி அதியமான்கோட்டை சோதனைச்சாவடியில் போலீசார் பேருந்தை மறித்தனர். ஜன்னல் வழியாகக் குதித்துத் தப்பியோட முயன்ற நிஷாந்தை சினிமா பாணியில் விரட்டிப் பிடித்த போலீசார், மதுரை மாடக்குளம் மற்றும் முனியாண்டிபுரம் மலைப்பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த மீதமுள்ள 6.2 கிலோ தங்க நகைகளையும் மீட்டனர்" என்று தெரிவித்துள்ளார்.