தமிழ்நாடு

தங்கம் மீதான இறக்குமதி வரி 15% உயர்வு: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.8,560 அதிகரிப்பு!

By Christon
13 May 2026, 11:00 AM
மத்திய அரசின் அதிரடி வரி உயர்வு காரணமாக, தமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் இன்று கிடுகிடுவென உயர்ந்து நகைப்பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
மத்திய அரசின் அதிரடி வரி உயர்வு காரணமாக, தமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் இன்று கிடுகிடுவென உயர்ந்து நகைப்பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பை நிலைப்படுத்தவும், வெளிநாடுகளில் இருந்து தங்கம் இறக்குமதி செய்யப்படுவதைக் கட்டுப்படுத்தவும் மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி ஏற்கனவே இருந்த 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. பிளாட்டினம் மற்றும் இதர விலைமதிப்பற்ற உலோகங்களுக்கும் இந்த வரி உயர்வு பொருந்தும் என மத்திய நிதியமைச்சகம் அரசாணை வெளியிட்டுள்ளது.

பிரதமர் மோடியின் வேண்டுகோள்

முன்னதாக தெலுங்கானாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மேற்காசியப் போர் பதற்றம் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வைக் குறிப்பிட்டு, நாட்டின் பொருளாதார நலன் கருதி பொதுமக்கள் அடுத்த ஓராண்டுக்குத் தங்கம் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்தே இந்த வரி உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இன்றைய விலை நிலவரம்

வரி உயர்வு அறிவிக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே சந்தையில் தங்கம் விலை எகிறியது. சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.8,560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,23,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.1,070 அதிகரித்து ரூ.15,400-ஆக உள்ளது. அதேபோல், வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.30 உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.3,30,000 என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.