தமிழகத்தில் தவெக அரசு அமைந்து மூன்று மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அவையில் விவாதங்களுக்கு இடையே, காட்டுமன்னார்கோவில் விசிக எம்.எல்.ஏ ஜோதிமணி வைத்த கோரிக்கை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சட்டப்பேரவையில் பேசிய காட்டுமன்னார்கோவில் தொகுதி எம்.எல்.ஏ ஜோதிமணி, 280 கி.மீ தொலைவில் உள்ள தனது தொகுதியிலிருந்து சென்னைக்கு பேருந்து அல்லது ரயிலில் வருவதற்குப் பயணப்படி வழங்கப்பட்டாலும், சொந்தமாக வாகனம் இல்லாததால் வாடகை வாகனத்திலேயே பேரவைக்கு வருவதாகத் தெரிவித்தார். 40 கி.மீ சுற்றளவு கொண்ட தொகுதிக்குள் சென்று மக்களின் குறைகளைக் கேட்க வாகன வசதியும், உடன் பணியாற்றச் செயலாளரை நியமித்து ஊதியம் வழங்க வசதியும் இல்லை எனக் கூறினார்.
மேலும், பேரவையில் உள்ள பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் இதே நிலையில்தான் உள்ளதாகவும், சிலர் காலணி கூட அணிய முடியாத அளவிற்கு எளிய சூழலில் பணியாற்றுவதாகவும் அவர் குறிப்பிட்டார். லஞ்சமற்ற ஆட்சியை வழங்க வேண்டும் என்றால், எம்.எல்.ஏ-க்களுக்குத் தேவையான வாகன வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளை அரசு செய்து தர வேண்டும் என வலியுறுத்தினார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், நேர்மையாகப் பணியாற்றும் போது ஏற்படும் நடைமுறைச் சிரமங்களையே உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளதாகக் குறிப்பிட்டார். தற்போதைய மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் நலன் சார்ந்த கோரிக்கைகளை அவையிலிருக்கும் முதலமைச்சரின் கவனத்திற்கு நேரடியாகக் கொண்டு செல்வதாகக் கூறினார்.
முதலமைச்சரின் கரங்கள் அள்ளிக் கொடுக்கும் கரங்கள் என்பதால், இக்கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என சபாநாயகர் உறுதியளித்தார். இச்சம்பவம் தொடர்பான உரையாடல் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.