தமிழ்நாடு

சென்னை அருகே பயங்கரம்.. வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொடூர கொலை!

By Christon
15 May 2026, 12:28 PM
சென்னை அருகே வீட்டில் தனியாக வசித்து வந்த 70 வயது மூதாட்டியை கொடூரமாக கொலை செய்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அருகே வீட்டில் தனியாக வசித்து வந்த 70 வயது மூதாட்டியை கொடூரமாக கொலை செய்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அம்பத்தூர் அடுத்த சூரப்பட்டு பகுதியைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி பொன்னம்மாள், தனது கணவர் மறைவிற்குப் பிறகு வீட்டில் தனியாக வசித்து வந்தார். நேற்று இரவு அவரது மகள் செல்போனில் அழைத்தபோது பொன்னம்மாள் பதிலளிக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் நேரில் சென்று பார்த்தபோது, பொன்னம்மாள் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

தடயங்களை மறைக்க கொள்ளையர்கள் சதி

தகவலறிந்து வந்த புதூர் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மூதாட்டி தனியாக இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், அவரது கை, கால்களைக் கட்டி கழுத்தை நெரித்துக் கொலை செய்தது தெரியவந்தது. குறிப்பாக, தடயங்களை அழிப்பதற்காகக் கொலையாளிகள் மூதாட்டியின் உடல் மீது தண்ணீரை ஊற்றிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். நேற்றுதான் பொன்னம்மாள் வங்கியிலிருந்து ஒரு லட்ச ரூபாய் பணம் எடுத்து வந்ததும், அந்தப் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆட்டோவில் தப்பிய மர்ம நபர்கள்

சம்பவத்தன்று இரவு இரண்டு நபர்கள் ஆட்டோவில் பொன்னம்மாள் வீட்டிற்கு வந்து சென்றது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. அந்த காட்சிகளைக் கைப்பற்றியுள்ள போலீசார், தப்பியோடிய கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும், மூதாட்டி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாரா என்பது குறித்துப் பிரேதப் பரிசோதனை அறிக்கைக்குப் பின்னரே தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.