சென்னை திருவொற்றியூர் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி வளாகத்தை ஒட்டிய பகுதியில், பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வந்த தனுஷ் என்ற மாணவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த தனுஷ், அங்குள்ள ஜெயகோபால் கரோடியா மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், பள்ளியின் பின்புறம் அமைந்துள்ள முட்புதர் பகுதியில் மாணவர் தனுஷ் காயங்களுடன் பிணமாகக் கிடந்துள்ளார். அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் இதைப் பார்த்து உடனே பள்ளித் தலைமை ஆசிரியருக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மாணவனின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கடந்த ஆண்டு இதே பள்ளியில் படித்துவிட்டு வெளியேறிய சில மாணவர்கள், தனுஷுக்காகக் காத்திருந்து அவரைக் கடுமையாகத் தாக்கிப் படுகொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய மாணவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.