தமிழ்நாடு

சென்னைக்கு கனமழை எச்சரிக்கை.. 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்!

By Christon
04 Jun 2026, 03:10 PM
சென்னையில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்கிய நிலையில், தமிழகத்தில் நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், தெற்கு கேரள கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

கன முதல் மிக கனமழை எச்சரிக்கை

இதன்காரணமாக, இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திருப்பூர், திண்டுக்கல், தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.

நாளை (ஜூன் 5) கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், தேனி, திண்டுக்கல், திருப்பூர், விருதுநகர், மதுரை, சிவகங்கை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சேலம், திருவண்ணாமலை, சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவள்ளூர், வேலூர், செங்கல்பட்டு மற்றும் ஈரோடு மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.

நாளை மறுநாள் (ஜூன் 6) நீலகிரி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பூர், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.

சென்னை வானிலை

சென்னையில் நாளை (ஜூன் 5) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழையும், அவ்வப்போது கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.