தமிழ்நாடு

கோவையில் பிரம்மாண்ட 'பெரியார் அறிவுலகம்'.. முதலமைச்சர் விஜய் திறந்து வைக்கிறார்!

By Christon
13 Oct 2026, 09:34 AM
கோவையில் ரூ.300 கோடியில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான 'பெரியார் அறிவுலகம்' நூலகம் மற்றும் அறிவியல் மையத்தை வரும் அக்டோபர் 16ஆம் தேதி முதலமைச்சர் விஜய் திறந்து வைக்கிறார்.

கோவை காந்திபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான 'பெரியார் அறிவுலகம்' எனப்படும் நூலகம் மற்றும் அறிவியல் மையம் வரும் அக்டோபர் 16ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. இதற்காகச் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வரும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், இந்த நூலகத்தைத் திறந்து வைத்துப் பார்வையிட உள்ளார்.

ரூ.300 கோடியில்..

கோவை நஞ்சப்பா சாலை பேருந்து நிலையம் அருகில் உள்ள சிறைத்துறைக்குச் சொந்தமான 7 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட இதன் கட்டுமானப் பணிகள் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளன.

மொத்தம் ரூ.300 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வளாகத்தில், ரூ.245 கோடியில் கட்டிடப் பணிகளும், ரூ.50 கோடியில் புத்தகங்களும், ரூ.5 கோடியில் மின்-புத்தகங்களும் (E-Books) கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், இந்த வளாகத்தில் பெரியாரின் திருவுருவச் சிலையும் நிறுவப்பட்டுள்ளது.

அதிநவீன வசதிகள் & ஏழு தளங்கள்

இந்த நூலகம் ஏ மற்றும் பி என இரு வளாகங்களாகப் பிரிக்கப்பட்டு, தரைத்தளம் மற்றும் 7 தளங்களுடன் 1.98 லட்சம் சதுரடியில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.

தரைத்தளம்: மாற்றுத்திறனாளிகளுக்கான நூலகப் பகுதி, 350 பேர் அமரக்கூடிய அரங்கம், அறிவியல் உபகரணங்கள் மற்றும் கோளரங்கம் (Planetarium) அமைக்கப்பட்டுள்ளன.

நடுத்தர தளங்கள்: 2வது தளத்தில் குழந்தைகள் நூலகமும், 3வது தளத்தில் போட்டித் தேர்வு பயிற்சி மையமும் செயல்படவுள்ளன.

மேல் தளங்கள்: தமிழ் மற்றும் ஆங்கில நூல்கள் பிரிவுகள், வரலாற்றுப் புத்தகங்கள், டிஜிட்டல் நூலகம் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கான இன்குபேஷன் சென்டர் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

திறப்பு விழா ஏற்பாடுகள் தீவிரம்

இந்த நூலகப் பணிகள் திமுக ஆட்சியின்போதே பெரும்பகுதி நிறைவடைந்திருந்த நிலையில், திறப்பு விழா தாமதமானது குறித்துச் சட்டமன்றத்தில் திமுக தரப்பில் கேள்விகள் எழுப்பப்பட்டன. தற்போது அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டு, அக்டோபர் 16ஆம் தேதி திறப்பு விழாவுக்கான நாள்குறிக்கப்பட்டுள்ளது.

நூலகத்தைத் திறந்துவைக்க வரும் முதலமைச்சர் விஜயை வரவேற்கும் வகையில் விழா மேடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பலரும் பங்கேற்க உள்ளனர்.