சர்வதேச சந்தை நிலவரம், பங்குச் சந்தை உள்ளிட்ட முதலீடுகளில் நிலவிய நிலையற்ற தன்மை போன்ற காரணங்களால் கடந்த ஆண்டுகளில் தங்கத்தின் விலை உச்சத்தை எட்டியது. ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் வரை சென்றது.இந்த நிலையில், சற்றும் எதிர்பாராத விதமாக கடந்த பத்து நாட்களாகத் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ஒரு லட்சம் ரூபாய்க்கும் கீழ் சென்றது.
இதனால் மகிழ்ச்சியடைந்த நகைப்பிரியர்கள் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டினர். மத்திய தரப்பு மக்களும் மாதாந்திர சேமிப்பின் மூலம் தங்க நகைக் கடைகளில் குவிந்தனர்.இதன் காரணமாக தங்க நகைகளின் விற்பனை அதிகரித்தது. இந்த நிலையில், தங்கத்தின் விலை ஏறுமுகத்திற்குச் சென்றுள்ளது.
இரு வாரங்களுக்குப் பிறகு நேற்று விலை உயர்ந்த நிலையில், சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 1,080 ரூபாய் அதிகரித்து, 92,800 ரூபாய்க்கு விற்பனை ஆனது.இதன் தொடர்ச்சியாக இன்றும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 115 ரூபாய் உயர்ந்து, 11,715 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.சவரனுக்கு 920 ரூபாய் உயர்ந்து, 93,720 ரூபாய்க்கு விற்பனையாகிறது.கடந்த 15 நாட்களில் மட்டும் தங்கம் சவரனுக்கு ரூ.15,000 வரை குறைந்திருந்தது. இந்நிலையில், இந்த வாரம் தங்கத்தின் விலை உயர்ந்து வருவது, திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை வைத்துள்ள மத்தியதர மக்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தங்கத்தின் விலை உயர்ந்தபோதிலும், வெள்ளியின் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது.ஒரு கிராம் வெள்ளி 175 ரூபாய்க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி 1,75,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களில் ஏற்பட்ட பெரிய வீழ்ச்சிக்குப் பிறகு தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்தாலும், ஜனவரி மாத உச்ச விலையுடன் ஒப்பிடுகையில் இன்னும் கணிசமாகக் குறைவாகவே உள்ளது.உள்ளூர் தேவை அதிகரித்தது, குறைந்த விலையில் வாங்குவோர் ஆர்வம் காட்டியது மற்றும் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மீண்டது ஆகியவை இந்த உயர்வுக்குக் காரணமாகக் கூறப்படுகின்றன.என்றாலும், சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலரின் மதிப்பு, வட்டி விகிதம் உள்ளிட்ட காரணிகளே தங்கத்தின் விலையை நிர்ணயம் செய்கின்றன. இந்த நிலையில், அமெரிக்க டாலரின் மதிப்பு, வட்டி விகித எதிர்பார்ப்புகள் மற்றும் பொருளாதாரத் தரவுகளால் வரும் நாட்களில் விலை ஏற்ற இறக்கங்கள் தொடர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.