உலகளாவிய பொருளாதார மாற்றங்கள் மற்றும் மேற்காசிய போர் சூழல் காரணமாக, சென்னையில் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு அதிரடியாக ரூ.2,400 குறைந்து பொதுமக்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
சென்னையில் கடந்த சில நாட்களாகத் தங்கத்தின் விலை கடுமையான ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வந்தது. ஜூன் 9 அன்று சவரன் ரூ.1,13,600-க்கு விற்கப்பட்ட நிலையில், நேற்று சவரனுக்கு ரூ.3,200 குறைந்தது. அதன் தொடர்ச்சியாக, இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.300 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,500-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.2,400 குறைந்து, ஒரு பவுன் தங்கம் ரூ.1,08,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதன் மூலம் கடந்த இரண்டு நாட்களில் மட்டுமே தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.5,600 வரை சரிந்துள்ளது. அதேநேரம், வெள்ளியின் விலையில் எவ்வித மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ.260-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.2.60 லட்சத்துக்கும் நீடிக்கிறது.
தற்போது நிலவி வரும் மேற்காசிய போரின் எதிரொலியாக, சர்வதேச முதலீட்டாளர்கள் கச்சா எண்ணெய் மீது அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால் டாலர் மற்றும் தங்கம் மீதான முதலீடுகள் கணிசமாகக் குறைந்து, உலக சந்தையில் இரண்டின் மதிப்பும் சரிந்து வருகிறது. வழக்கமாக டாலரின் மதிப்பும் தங்கத்தின் விலையும் ஒன்றுக்கொன்று எதிர்மறையாக (ஒன்று உயர்ந்தால் மற்றொன்று குறையும்) இருக்கும். ஆனால், டாலர் மற்றும் தங்கம் ஆகிய இரண்டின் மதிப்பும் ஒரே நேரத்தில் சரிந்து, கச்சா எண்ணெய்யின் விலை மட்டும் உயர்ந்திருப்பது இதுவே முதல்முறையாகும்.
சர்வதேச சந்தையின் இந்த விசித்திரமான மந்தநிலை காரணமாக, அடுத்து வரும் ஒரு வார காலத்திற்கும் தங்கத்தின் விலை இதேபோல் தொடர்ந்து குறையவே அதிக வாய்ப்புகள் உள்ளதாகச் தங்கம் மற்றும் வெள்ளி நகை வியாபாரிகள் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.