உலகளாவிய சந்தை நிலவரங்களின்படி தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கடந்த சில மாதங்களாகக் கடுமையான உயர்வைச் சந்தித்து வந்த நிலையில், சென்னையில் இன்றும் விலை குறைந்து நுகர்வோருக்கும் முதலீட்டாளர்களுக்கும் நிம்மதியளித்துள்ளது.
சர்வதேச சந்தை மாற்றங்களால் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுவதால் முதலீட்டாளர்கள் மத்தியில் ஒருவித அச்சம் நிலவி வந்தது. குறிப்பாக, ஒரு சவரன் தங்கம் 1 லட்ச ரூபாயைத் தாண்டி விற்பனையாகி வந்தது. இந்தச் சூழலில், வார இறுதியில் சவரனுக்கு ரூ.1,840 குறைந்திருந்ததைத் தொடர்ந்து, இன்றைய தினமும் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு மேலும் ரூ.1,040 குறைந்துள்ளது.
இதன் மூலம், சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.1,12,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், கிராமுக்கு ரூ.130 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,070-க்கு விற்பனையாகிறது.
தங்கத்தின் விலை அதிரடியாகக் குறைந்துள்ள நிலையில், இன்றைய வெள்ளி விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி நேற்று விற்கப்பட்ட அதே விலையான ரூ.270-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக, ஒரு கிலோ வெள்ளியின் விலையும் மாற்றமில்லாமல் இன்று ரூ.2,70,000-க்கு விற்பனையாகி வருகிறது. தங்கம் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருவது பொதுமக்கள் மற்றும் நகைப்பிரியர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.