தமிழ்நாடு

தங்கம் விலை நிலவரம்.. நகை பிரியர்களுக்கு ஆறுதல் செய்தி!

By Christon
02 Jun 2026, 10:10 AM
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி நேற்றைய விலையில் நீடிக்கிறது.
கடந்த சில மாதங்களாகவே சர்வதேச சந்தை நிலவரங்களின் அடிப்படையில் ஆபரணத் தங்கத்தின் விலை பெரும் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் நிலையில், சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது.

சர்வதேசச் சூழல்களால் கடந்த சில மாதங்களாகத் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து, ஒரு சவரன் 1 லட்ச ரூபாயைத் தாண்டி விற்பனையாகி வருகிறது. இந்தத் தொடர் விலை மாற்றங்களால் முதலீட்டாளர்கள் மத்தியில் ஒருவித அச்சம் நிலவி வருகிறது. முன்னதாக, கடந்த சனிக்கிழமை தங்கம் கிராமுக்கு ரூ.30-ம், சவரனுக்கு ரூ.240-ம் உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,17,040-க்கு விற்பனை செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, நேற்றைய தினம் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாகக் குறைந்தது. நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.130-ம், சவரனுக்கு ரூ.1,040-ம் குறைந்து, ஒரு சவரன் ரூ.1,16,000-க்கு விற்பனையானது. இந்த வீழ்ச்சிக்குப் பிறகு, இன்றைய சந்தையில் தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை. அதன்படி, இன்று சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.14,500-க்கும், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,16,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக ஏறி இறங்கி வரும் சூழலிலும், வெள்ளியின் விலை கடந்த சில நாட்களாக எவ்வித மாற்றமும் இன்றி நிலையாகப் பயணித்து வருகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் இன்றும் வெள்ளியின் விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. அதன்படி, இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.290-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,90,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.