பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையைத் தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் 'மக்கள் மேடை மக்கள் இயக்கம்' என்ற புதிய அமைப்பைத் தொடங்கியுள்ளார். இதில் பொதுமக்கள் இணையுமாறு அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு தற்போது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ராஜினாமாவுக்குப் பிறகு, புதிய அரசியல் இயக்கம் மற்றும் தேர்தல் போட்டி குறித்த அறிவிப்பை இன்று வெளியிட்டார். இந்த பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில்தான், லதா ரஜினிகாந்தும் தனது புதிய இயக்கப் பிரகடனத்தை வெளியிட்டுள்ளார். முன்னதாக நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்கும் முடிவைக் கைவிட்டிருந்த நிலையில், தற்போது அவரது மனைவி லதா ரஜினிகாந்த் புதிய அமைப்பைத் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
'ஒன்றிணைவோம்' - லதா ரஜினிகாந்த் அழைப்பு
இது தொடர்பாக லதா ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும் நன்மைக்காகவும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். மாற்றத்தை விரும்பும் அனைத்துத் தரப்பு மக்களும் தங்களோடு கைகோர்க்கலாம் என்று குறிப்பிட்டுள்ள அவர், மக்களின் ஆக்கபூர்வமான கருத்துக்கள், அனுபவங்கள் மற்றும் திறமைகளை மக்கள் சேவைக்குப் பயன்படுத்தும் ஒரு தளமாக இந்த 'மக்கள் மேடை' விளங்கும் என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் சக்தியாக உருவெடுக்கத் திட்டம்
அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள், ஓய்வுபெற்ற பணியாளர்கள், இளைஞர்கள் எனச் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த நினைக்கும் அனைவரும் இந்த இயக்கத்தில் பங்கேற்கலாம் என்று லதா ரஜினிகாந்த் கூறியுள்ளார். அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து ஒரு பெரும் மக்கள் சக்தியாக உருவெடுத்து, அதன் மூலம் பல நல்ல காரியங்களைச் செய்ய உள்ளதாகவும் அவர் அந்த வீடியோவில் விவரித்துள்ளார்.