தமிழ்நாடு

முதலமைச்சர் விஜய்யின் அதிரடி நடவடிக்கைகள்.. டெடிகேஷனா? டைவர்ஷனா?

By Christon
28 Aug 2026, 09:54 PM
ஆட்சி அமைத்து 100 நாட்களைக் கடந்த தவெக அரசின் ஆய்வுகள் மக்கள் நலனுக்கானவை என ஆதரவாளர்களும், முக்கியப் பிரச்சினைகளை மடைமாற்றும் 'டைவர்ஷன் அரசியல்' என திமுகவும் விமர்சித்து வருகின்றன.
தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று 100 நாட்களைக் கடந்துள்ளது. இந்த குறுகிய காலத்தில் எதிர்க்கட்சிகளுக்கு எதிரான அதிரடி சோதனைகள், திமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை ரைடு, அவதூறு வழக்கில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது, உதயநிதி கைது மற்றும் குதிரை பேரம் குறித்த விசாரணைகள் என அடுத்தடுத்து பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி அரசியல் களத்தைச் சூடேற்றியுள்ளன.

இருப்பினும், இந்த அதிரடி நடவடிக்கைகள் அனைத்தும் மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காகவே மேற்கொள்ளப்படுவதாக எதிர்க்கட்சியான திமுக கடுமையாக விமர்சித்து வருகிறது. அதிமுக எம்.எல்.ஏ-க்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தபோது குதிரை பேரக் குற்றச்சாட்டு எழுந்தது என்றும், அதனை மடைமாற்றவே அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார் என்றும் திமுக குற்றம்சாட்டியது.

இதுகுறித்து திமுக தலைவர் தனது எக்ஸ் பக்கத்தில், "விமர்சிக்கும் எதிர்க்கட்சியினரைக் கைது செய்து, குதிரை பேரத்தின் மூலம் ஆட்சியைத் தக்கவைக்க முதலமைச்சர் ஜோசப் விஜய் முயல்கிறார்; இது ஒரு 'Take Diversion' அரசு" எனச் சாடியிருந்தார்.

இதையடுத்து, கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட முயல்வதாகவும், உரிய காவிரி நீரைத் திறக்கவில்லை என்ற விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், தவெக அரசு அமைதி காத்ததாக விமர்சனங்கள் எழுந்தன. காவிரி உரிமை மீட்புக்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய நிலையில், தவெக அரசு 'தொகுதி மறுவரையறை' தொடர்பான எம்.பி-க்கள் கூட்டத்தைக் கூட்டியது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் துரைமுருகன், "காவிரி உரிமையை மீட்பதும் மேகதாதுவைத் தடுப்பதும் மிக அவசியமான சூழலில், தவெக அரசு வழக்கம்போல டைவர்ஷன் அரசியலைச் செய்யக் கூடாது" என்று குறிப்பிட்டார்.

தூய்மைப் பணியாளர்களின் பணி நிரந்தரப் போராட்டம், விவசாயிகளின் முழு பயிர்க்கடன் தள்ளுபடி மற்றும் பால் கொள்முதல் விலை உயர்வுப் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், முதலமைச்சர் விஜய் இன்று திடீரெனப் புழல் சிறையில் ஆய்வு மேற்கொண்டார். இதுவும் போராட்டங்களை மடைமாற்றும் முயற்சியே என எதிர்க்கட்சி நிர்வாகிகள் விமர்சித்து வருகின்றனர்.

அதேவேளையில், முதலமைச்சர் விஜய் மக்கள் நலனுக்காகவே நேரடியாகக் களமிறங்கி ஆய்வுகளை மேற்கொள்கிறார் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர். விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டுதான் பரந்தூர் விமான நிலையத் திட்டத்தையே தவெக அரசு ரத்து செய்தது என்றும், அவரது அர்ப்பணிப்புமிக்க செயல்பாடுகளுக்கு இதுவே சான்று என்றும் சமூக வலைதளங்களில் ஆதரவுக் குரல்களும் வலுத்து வருகின்றன.